சென்னையில் நள்ளிரவில் பெய்த திடீர் கனமழை; 15 விமானங்களின் சேவை தாமதம்

சென்னை: சென்னையில் நள்ளிரவில் பெய்த கனமழையால் 15 விமானங்களின் சேவை தாமதமாகியது. இதனால், பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப்பாதை காரணமாக, சென்னையில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அந்தக் கணிப்பின்படியே, நேற்று இரவு சென்னையின் பல்வேறு இடங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்துள்ளது.

அடையாறு, மயிலாப்பூர், தாம்பரம், பெருங்குடி, தரமணி, கிண்டி, வேளச்சேரி, பல்லாவரம், சோழிங்கநல்லூர், மீனம்பாக்கம், குரோம்பேட்டை ஆகிய பகுதிகளில் மழை பெய்தது. இதனால், குளிர்ச்சியான சீதோஷன நிலை ஏற்பட்டதால், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். இருப்பினும், இந்த மழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

மீனம்பாக்கம் பகுதியில் பெய்த கனமழை காரணமாக 15 விமானங்களின் சேவை தாமதமாகின. குறிப்பாக, அபுதாபி, டில்லி, கவுகாத்தி, கோவை, திருச்சி, மும்பையில் இருந்து வந்த விமானங்கள், விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்தன. அதேபோல, சென்னையில் இருந்து டில்லி, பெங்களூரு, மும்பை மற்றும் அபுதாபி உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லவிருந்த விமானங்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது.

இதனிடையே, நீலகிரி மற்றும் கோவை மாவட்ட மலைப் பகுதிகளில் இன்று இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Source link