சென்னையில் ரஷ்ய கல்வி கண்காட்சி: எம்.பி.பி.எஸ் உள்ளிட்ட உயர்கல்விக்கு நேரடி சேர்க்கை வாய்ப்பு

ரஷ்யாவில் மருத்துவம் மற்றும் உயர்கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு சிறந்த வாய்ப்பாக, 2026-27-ம் ஆண்டுக்கான அகில இந்திய ரஷ்ய கல்வி கண்காட்சியின் இரண்டாவது பதிப்பு ஜூலை 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் சென்னை ரஷ்ய கலாச்சார மையத்தில் நடைபெறுகிறது. இந்தக் கண்காட்சியில் மாணவர்கள் எம்.பி.பி.எஸ் மற்றும் பிற உயர்கல்வி படிப்புகளுக்கு நேரடி (Spot Admission) சேர்க்கை பெறும் வாய்ப்பைப் பெறலாம் என்று ரஷ்யன் ஹவுஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கண்காட்சியில் ரஷ்ய அரசின் பிரதிநிதிகள் மற்றும் முன்னணி மாநில, கூட்டாட்சி பல்கலைக்கழகங்களின் அதிகாரிகள் நேரடியாக பங்கேற்று, மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுடன் கலந்துரையாட உள்ளனர். சேர்க்கை நடைமுறை, தகுதிகள், கல்வி உதவித்தொகைகள், கல்வித் திட்டங்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் விரிவாக விளக்கப்படவுள்ளன. இந்திய மாணவர்கள் மருத்துவக் கல்விக்காக அதிகம் தேர்வு செய்யும் நாடுகளில் ரஷ்யா தொடர்ந்து முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. 

கடந்த ஆண்டு இந்திய மாணவர்களுக்காக 5,000 எம்.பி.பி.எஸ் இடங்கள் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், இந்த ஆண்டு அந்த எண்ணிக்கை சுமார் 8,000 இடங்களாக உயர்த்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய அரசு வழங்கும் கல்வி மானியங்களால் அந்நாட்டில் மருத்துவக் கல்வி மிகவும் குறைந்த செலவில் கிடைக்கிறது. எம்.பி.பி.எஸ் படிப்புக்கான ஆண்டு கல்விக் கட்டணம் சுமார் ரூ.2.25 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது, இதனால் வெளிநாட்டில் மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு இது சிறந்த வாய்ப்பாக உள்ளது.

நீட் தேர்வில் தகுதி மதிப்பெண் பெற்ற மாணவர்கள் இந்தச் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம். மேலும், தமிழ்மூலக் கல்வி பயின்ற மாணவர்களும் சேர்க்கை பெற முடியும். சேர்க்கைக்காக ஐ.இ.எல்.டி.எஸ், சி.இ.டி (IELTS, CET) போன்ற கூடுதல் நுழைவுத் தேர்வுகள் தேவையில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. எம்.பி.பி.எஸ் மட்டுமின்றி, பொறியியல், அறிவியல், உயிரித் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence), தரவு அறிவியல் (Data Science) உள்ளிட்ட பல்வேறு இளநிலை மற்றும் முதுநிலைப் படிப்புகளுக்கும் மாணவர்கள் இந்தக் கண்காட்சியின் மூலம் சேர்க்கை பெறலாம்.

சென்னைக்குப் பிறகு இந்த கல்விக் கண்காட்சி மதுரை, திருச்சி, சேலம் மற்றும் கோயம்புத்தூர் நகரங்களிலும் நடைபெற உள்ளது. கண்காட்சிக்கு நுழைவுக் கட்டணம் எதுவும் இல்லை. நேரடி சேர்க்கையைப் பெற விரும்பும் மாணவர்கள் தங்களின் கல்விச் சான்றிதழ்கள் மற்றும் நீட் தொடர்பான ஆவணங்களை கட்டாயம் எடுத்துவருமாறு ஏற்பாட்டாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

Source link