சென்னை ஓபன் டென்னிஸ் மாயாவுக்கு சிறப்பு அனுமதி

சென்னை: சென்னை ஓபன் டென்னிஸ் ஒற்றையரில் பங்கேற்க , மாயா ரேவதி உள்ளிட்ட 3 இந்திய வீராங்கனைகளுக்கு சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணைய (எஸ்.டி.ஏ.டி.,) டென்னிஸ் மைதானத்தில், வரும் நவ. 2–8ல் பெண்களுக்கான டபிள்யு.டி.ஏ., சென்னை ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கவுள்ளது. இதன் ஒற்றையர் பிரிவில், ‘நடப்பு சாம்பியன்’ இந்தோனேஷியாவின் ஜானிஸ் டிஜென், தாய்லாந்தின் லான்லனா, ஆஸ்திரியாவின் லில்லி, கஜகஸ்தானின் யூலியா புடின்ட்சேவா உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

இந்நிலையில் ஒற்றையர் பிரிவில் விளையாட இந்தியாவின் ‘நம்பர்–1’ வைஷ்ணவி, சஹாஜா, மாயா ரேவதிக்கு சிறப்பு அனுமதி (‘வைல்டு கார்டு’) வழங்கப்பட்டுள்ளது. சமீபத்தில் போர்ச்சுகலில் நடந்த போட்டியில் மாயா ரேவதி, ஒற்றையர், இரட்டையரில் சாம்பியன் பட்டம் வென்றிருந்தார்.

தமிழக டென்னிஸ் சங்க தலைவர் விஜய் அமிர்தராஜ் கூறுகையில், ‘‘சொந்த மண்ணில் வைஷ்ணவி, சஹாஜா, மாயா ரேவதி சாதிப்பர் என்று நம்புகிறேன்,’’ என்றார்.

Source link