சென்னை, காஞ்சிபுரத்தில் இடைவிடாத மழை; 10 செ.மீ அளவை தாண்டிய இடங்கள் பட்டியல்: 5 மாவட்டங்களில் இன்று பள்ளிகள் விடுமுறை

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக பல்வேறு இடங்களில்  தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், மேலும் மழை நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சில மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த சில வாரங்களாக பல்வேறு இடங்களில் கனமழை நீடித்து வருகிறது. குறிப்பாக சென்னையில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழையின் காரணமாக பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. ஆனாலும், அமைச்சர்கள் துரிதமாக செயல்பட்டு இரவோடு இரவாக தண்ணீரை வெளியேற்றியதாக கூறப்பட்டது. 

அதே சமயம் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், பல பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீரை அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனிடையே சென்னையில் வரும் நாட்களில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், கே.டி.சி.சி (சென்னை) மழை நிலவரம் – கனமழை மேகங்கள் தற்போது சென்னையை நோக்கி நகர்ந்து வருகின்றன. இந்த மழைப்பொழிவு நகரும்போது, ​​நகரம் முழுவதும் மழையின் அளவு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விடுமுறைக்குப் பிறகு மக்கள் தங்கள் சொந்த ஊர்களிலிருந்து சென்னைக்குத் திரும்பும் நேரத்தில் இது நிகழ்கிறது. என்று குறிப்பிட்டுள்ளார். 

அதேபோல் மற்றொரு பதிவில், சென்னை கே.டி.சி.சி-யில் (KTCC) நூற்றுக்கும் மேற்பட்ட மழை பெய்து, மீண்டும் தமிழகத்தின் மழைப்பொழிவுப் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. மேலும் மழை மேகங்கள் சென்னையை நோக்கி நகர்கின்றன. காலை 8.30 மணிக்கு முன்பாக, சென்னையில் இன்னும் பல இடங்களில் மழைப்பொழிவு 100 மி.மீ-ஐத் தாண்டும். மழைப் பதிவு மீட்டமைக்கப்படும் காலை 8.30 மணிக்குள், மழைப்பொழிவு 100-150 மி.மீ-க்கு இடையில் முடிவடைவதை நாம் காணலாம் என கூறியுள்ளார். 

இந்நிலையில், கனமழை அறிவிப்பு காரணமாக 5 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ராணிப்பேட்டை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அதேபோல் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னையில், இரவு முழுவதும் விட்டு விட்டு மழை பெய்த நிலையில், கிண்டி, வேளச்சேரி, தரமணி, பெருங்குடி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை நீடித்து வருகிறது. கனமழையால் சாலைகளில் தேங்கி நிற்கும் மழைநீரை ராட்சத மோட்டார்கள் மூலம் அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

இதனிடையே சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, குமரி, தஞ்சை ஆகிய 16 மாவட்டங்களில்  காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

Source link