சென்னை,
சென்னை சித்த மருத்துவ ஆராய்ச்சி குழுமத்திடம் அரிய ஓலைச்சுவடிகளை ஈரோடு விவசாயி ஒப்படைத்தார்.
விவசாயி
ஈரோடு மாவட்டம் காஞ்சிக்கோவில் அருகே உள்ள பொன்னாண்டான்வலசு பகுதியை சேர்ந்தவர் ஜெகநாதன். விவசாயியான இவருக்கு திருமணமாகி இரண்டு மகன்கள் உள்ளனர். இவருடைய முன்னோர்கள் தங்களது வீட்டில் தலைமுறை தலைமுறையாக சில பண்டைய கால ஓலைச்சுவடிகளை பாதுகாப்பாக வைத்து வந்துள்ளனர்.
மருத்துவ குறிப்புகள்
இந்த ஓலைச்சுவடிகளை ஜெகநாதன் பராமரித்து வந்ததோடு, அதில் இருந்த அரிய மருத்துவக் குறிப்புகள் சிலவற்றையும் அவ்வப்போது படித்து புரிந்து கொண்டுள்ளார். ஒரு கட்டத்தில், இந்த ஓலைச்சுவடிகளில் மனித குலத்திற்கு பயன்படக்கூடிய ஏராளமான ரகசிய மருத்துவ குறிப்புகள் இருப்பதை அவர் கண்டறிந்தார்.
சித்த மருத்துவ ஆராய்ச்சி குழுமம்
இந்த அரிய தகவல்கள் தனக்கு மட்டுமே பயன்படாமல், உலக மக்கள் அனைவருக்கும் சென்றடைய வேண்டும் என்று அவர் விரும்பினார். இதனையடுத்து, சென்னை அரும்பாக்கத்தில் உள்ள சித்த மருத்துவ ஆராய்ச்சி குழும அதிகாரிகளை ஜெகநாதன் தொடர்பு கொண்டு, தன்னிடம் உள்ள ஓலைச்சுவடிகள் குறித்த விபரங்களை தெரிவித்தார்.
அரிய பொக்கிஷம்
அவரது தகவலின் பேரில், அந்த ஓலைச்சுவடிகளை பெற்று ஆய்வு செய்த சித்த மருத்துவ ஆராய்ச்சி குழுமத்தின் வல்லுநர்கள், அதில் பழங்கால அரிய சித்த மருத்துவ முறைகள் அடங்கியிருப்பதை உறுதி செய்தனர். சுயநலமின்றி, மக்கள் நலனை கருத்தில் கொண்டு இந்த ஓலைச்சுவடிகளை அரசிடம் விவசாயி ஜெகநாதன் ஒப்படைத்தார்.
இது குறித்து சித்த மருத்துவ ஆராய்ச்சி குழுமத்தைச் சேர்ந்த அலுவலர் மாணிக்கவாசகம் கூறியதாவது:-
பராமரிப்பு
பொதுமக்கள் பலரும் இதுபோன்ற ஓலைச்சுவடிகளை முறையாக பராமரிக்க வேண்டும். தமிழ் மருத்துவத்தின் பாரம்பரிய சித்த மருத்துவ குறிப்புகள் ஓலைச்சுவடிகளில்தான் அதிகம் உள்ளன. நீங்கள் இதுபோன்ற ஓலைச்சுவடிகளை முறையாக பராமரிப்பது மட்டுமின்றி, அரிய மருத்துவ குறிப்புகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதாகவும் கூறியுள்ளீர்கள்.
புத்தகம்
சித்த மருத்துவம் பயிலும் மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு இது ஒரு மிகப்பெரிய பிரசாதம் ஆகும். இதுபோன்ற ஓலைச்சுவடிகளின் குறிப்புகளை புத்தகம் மற்றும் ஆன்லைன் போர்டல் மூலம் நாங்கள் வெளிப்படுத்தி வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
