சென்னை மெரினா கடற்கரை சாலையில் மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக வாகன ஓட்டிகள் குற்றம்சாட்டி வந்தனர். இந்நிலையில், மெரினா கடற்கரை சாலையில் நிலவும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக, சென்னை லைட்ஹவுஸ் முதல் திரு.வி.க. பாலம் வரை 4 கி.மீ தொலைவில் ரூ.1000 கோடியில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியுள்ளது.
தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் மாற்றியமைப்பு: அரசு உத்தரவு
இது தொடர்பான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிக்கான ஆவணத்தை நெடுஞ்சாலைத்துறை வெளியிட்டுள்ளது. அதில், இந்த 4 கி.மீ பறக்கும் சாலையின் தொழில்நுட்ப, சுற்றுச்சூழல் சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்வது, போக்குவரத்து ஆய்வு, மண் பரிசோதனை, மழைநீர் வடிகால், சந்திப்பு மேம்பாடு, சர்வீஸ் சாலைகள் வடிவமைப்பு, முழுமையான வரைபடங்கள், செலவு மதிப்பீடு மற்றும் சுற்றுச்சூழல் மேலாண்மை திட்டம் ஆகியவை விரிவான திட்ட அறிக்கையில் இடம்பெறும்.
காலை, மாலை நேரங்களில் மெரினா, சாந்தோம், அடையாறு, மந்தைவெளி சாலைகளில் ஏற்படும் கடுமையான போக்குவரத்து நெரிசல் இதன் மூலம் முற்றிலும் குறையும். குறிப்பாக சாந்தோம் நெடுஞ்சாலையில் வாகனங்கள் சீராக செல்ல முடியும். கடற்கரை சாலையை இணைக்கும் இந்த பறக்கும் சாலை சென்னையின் மிக முக்கியமான உள்கட்டமைப்பு திட்டமாக பார்க்கப்படுகிறது. தற்போது விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க கன்சல்டன்ட் நியமிக்கப்பட்ட பிறகு, அடுத்தகட்டமாக கட்டுமானப் பணிக்கான டெண்டர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
