அகமதாபாத்: இந்தியாவின் செமிகண்டக்டர் துறையை வலுப்படுத்தவும், திறமையான மனிதவளத்தை உருவாக்கவும் தொழில் நிறுவனங்களும் – கல்வி நிறுவனங்களும் இணைந்து செயல்பட வேண்டும் என்று அதானி பல்கலைக்கழகத்தின் தலைவரான டாக்டர் பிரீத்தி அதானி வலியுறுத்தியுள்ளார்.
அதானி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ‘CHIPS 2026’ மாநாட்டில் பேசிய பிரீத்தி அதானி கூறியதாவது:-
இந்தியாவின் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஆராய்ச்சி, சிறப்புத் திறன்கள் மற்றும் மனித அறிவாற்றல் ஆகியவை அவசியம். செமிகண்டக்டர் துறையில் வலுவான இடத்தைப் பிடிக்க, நவீன உற்பத்தி ஆலைகளை அமைப்பது மட்டுமே போதாது. சிக்கலான தொழில்நுட்பங்களை வடிவமைத்தல், உருவாக்குதல் மற்றும் மேம்படுத்துதல் ஆகிய திறன்களையும் இந்தியா வளர்த்துக்கொள்ள வேண்டும்.
இந்தியாவின் செமிகண்டக்டர் திட்டம் இத்துறையின் வளர்ச்சிக்கு உத்வேகம் அளித்துள்ளது. குஜராத்தின் தோலேரா மற்றும் சனந்த் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் செமிகண்டக்டர் உற்பத்தித் துறையில் அந்த மாநிலத்தின் வளர்ச்சியை வலுப்படுத்தி வருகிறது. நமது தொழில்நுட்ப வளர்ச்சியின் உண்மையான அளவுகோல், நமது இயந்திரங்கள் எவ்வளவு புத்திசாலித்தனமாக மாறுகின்றன என்பது அல்ல. சிறந்த எதிர்காலத்தை உருவாக்க மனித அறிவாற்றலை நாம் எவ்வளவு புத்திசாலித்தனமாக வளர்த்துப் பயன்படுத்துகிறோம் என்பதே முக்கியம்.
அகமதாபாத்தில் அமையவுள்ள தனது பல்துறை உலகளாவிய வளாகத்தில் செமிகண்டக்டர் வடிவமைப்பு, உற்பத்தி மற்றும் பேக்கேஜிங் தொடர்பான திறன்களை வளர்க்க அதானி பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது. மாணவர்களுக்கான சிறப்புப் பயிற்சித் திட்டங்கள், தொழில் துறையினருக்கான உயர்நிலைக் கல்வி மற்றும் பேராசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டுத் திட்டங்கள் மூலம் கல்வி, ஆராய்ச்சி மற்றும் தொழில் துறையின் தேவைகளை ஒருங்கிணைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மாணவர்களுக்கு தொழில்நுட்ப அறிவை மட்டும் வழங்காமல், சுயமாகச் சிந்தித்தல், சிக்கலான பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுதல் மற்றும் புதுமையான யோசனைகளை உருவாக்குதல் போன்ற திறன்களையும் கல்வி நிறுவனங்கள் வளர்க்க வேண்டும். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சிக்கு நவீன செமிகண்டக்டர் சில்லுகள், சர்வர்கள், தரவு மையங்கள் மற்றும் நம்பகமான மின்சார விநியோகம் ஆகியவை அவசியம்.
2035 ஆம் ஆண்டுக்குள் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை அடிப்படையாகக் கொண்ட செயற்கை நுண்ணறிவு கட்டமைப்புகளை உருவாக்க 100 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்ய அதானி குழுமத் தலைவர் கவுதம் அதானி உறுதியளித்துள்ளார்” என்று கூறினார். மேலும், விசாகப்பட்டினத்தில் செயற்கை நுண்ணறிவு மையத்தை அமைப்பதற்காக கூகுள் நிறுவனத்துடன் அதானி குழுமம் இணைந்து செயல்பட்டு வருவதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
‘CHIPS 2026’ மாநாட்டில் குவால்காம், என்எக்ஸ்பி செமிகண்டக்டர்ஸ், மைக்ரான் டெக்னாலஜி, சினாப்சிஸ் மற்றும் இன்ஃபினியான் டெக்னாலஜிஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் நிபுணர்கள் பங்கேற்றனர். செமிகண்டக்டர் வடிவமைப்பு, உற்பத்தி மற்றும் இத்துறையில் உருவாகும் வேலைவாய்ப்புகள் குறித்து மூன்று முக்கிய குழு விவாதங்கள் நடைபெற்றன.
தொழில் நிறுவனங்கள் தங்களின் நடைமுறைச் சவால்களைப் பல்கலைக்கழகங்களின் வகுப்பறைகள் மற்றும் ஆய்வகங்களுக்குக் கொண்டு வர வேண்டும் என்று பிரீத்தி அதானி கேட்டுக்கொண்டார். இந்தியாவின் செமிகண்டக்டர் துறை வளர்ச்சிக்கு முதலீடுகள் மற்றும் உற்பத்தி வசதிகள் மட்டுமின்றி, திறமையான இளம் பொறியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் தொழில் நிறுவனங்களின் ஒருங்கிணைந்த பங்களிப்பும் முக்கியமானது என்று அவர் கூறினார்.
