தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. அதோடு வங்கக் கடலில் இன்று (26.10.2026) அர்னாப் புயல் உருவாகவுள்ளது என வானிலை மையம் கணித்துள்ளது. இன்று புயலாக வலுப்பெறும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நாளை (27.10.2026) தீவிரப் புயலாக மாறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து 28ஆம் தேதி ஆந்திராவின் பாபட்லா – விசாகபப்ட்டினம் இடையே அர்னாப் புயல் கரையைக் கடக்கக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த புயல் காரணமாகத் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. புயல் மற்றும் கனமழை எச்சரிக்கை காரணமாகப் பல மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் கடலூர், ராமநாதபுரம் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் மீனவர்கள் யாரும் மறு உத்தரவு வரும் வரை கடலுக்குச் செல்லக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக முதலமைச்சர் விஜய் சென்னையை அடுத்துள்ள செம்பரம்பாக்கம் ஏரியை இன்று நேரில் சென்று ஆய்வுப் பணிகளை மேற்கொண்டார். வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
அப்போது செம்பரம்பாக்கம் ஏரியின் தற்போதைய நீர் இருப்பு, அதன் மொத்த கொள்ளளவு மற்றும் ஏரிக்கு வரும் நீரின் வரத்து குறித்து அதிகாரிகளிடம் முதலமைச்சர் விஜய் விரிவாகக் கேட்டறிந்தார். அதே சமயம் பலத்த மழை பெய்தால் ஏரியின் பாதுகாப்பை உறுதி செய்வது எப்படி, உபரி நீர் திறப்பு மேலாண்மை மற்றும் கரையோர மக்களுக்கு முன்னெச்சரிக்கை எச்சரிக்கைகளை விரைவாக வழங்குவது குறித்து அதிகாரிகளுக்குப் பல்வேறு ஆலோசனைகளையும் உத்தரவுகளையும் வழங்கினார் எனக் கூறப்படுகிறது.
ஆய்வின் போது செம்பரம்பாக்கம் ஏரி அருகே முதலமைச்சரைக் காண்பதற்காக ஏராளமான பொதுமக்கள் திரண்டிருந்தனர். இதனையடுத்து பொதுமக்களை நேரில் சந்தித்த முதலமைச்சர் விஜய், அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
