நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே சுகன் என்பவரிடம் கடந்த 15ஆம் தேதி 135 கிலோ அளவிலான போதைப்பொருள் மத்திய வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது. இவை பல கோடி மதிப்பிலானவை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து சுகன் என்பவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியது. அதாவது இந்த போதைப் பொருளை இலங்கைக்குக் கடத்தத் திட்டமிட்டிருந்ததாகவும், வழக்கறிஞர் பூபாலன் என்பவரின் தூண்டுதலின் பெயரில் இந்த கடத்தல் அரங்கேறியதாகவும் தெரியவந்தது.
அதனைத் தொடர்ந்து பூபாலன், சுகன் மற்றும் கடத்தலில் ஈடுபட்ட மணிகண்டன், சதீஷ் ஆகிய 4 பேரும் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். இதில் பூபாலன் என்பவர் தவெக நாகை மாவட்டச் செயற்குழு உறுப்பினராகவும் இருந்துள்ளார். இந்த சம்பவத்திற்குப் பின்னர் பூபாலன் தவெக-வில் இருந்து நீக்கப்பட்டார். இதற்கிடையே கைது செய்யப்பட்டவர்கள் நாகை சுங்கத் துறை அலுவலகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுத் தொடர்ந்து 2 நாட்களுக்கு மேல் தீவிர விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டனர். அதன் பின்னர் வேதாரண்யம் நீதிமன்றத்தில் நீதிபதி சுதா முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதனையடுத்து அக்டோபர் 30ஆம் தேதி வரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி அவர்கள் 5 பேரும் நாகை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இத்தகைய பரபரப்பான சூழலில் சூழலில் த.வெ.க. நகரச் செயலாளர் பாலு என்பவர், இது குறித்து செய்தி வெளியிட்ட செய்தியாளர்களுக்கு வாட்ஸ் அப் மூலம் கால் செய்துள்ளார். அதில், “இதுதான் கடைசி எச்சரிக்கை. இனி செய்தி வெளியிட்டால் காலி செய்துவிடுவேன்” என மிரட்டியுள்ளார். இதனையடுத்து பத்திரிகையாளர் மன்றம் சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில் த.வெ.க. நிர்வாகி குறித்து செய்தி வெளியிட்ட செய்தியாளர்களை மிரட்டிய புகாரில் த.வெ.க. நகரச் செயலாளர் பாலு மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
