செல்போன் இல்ல; கார் இல்ல… அப்புறம் எதுக்கு ரூ.1 லட்சம் கொடுத்து இந்த பேய் தீவுக்கு போறாங்க?

சுற்றுலாச் சென்ற இடத்தில் மொபைல் போன் முற்றிலும் இயங்காமல் போனால் எப்படி இருக்கும்? சிக்னல் இல்லை, கார்கள் இல்லை, ஒரே ஒரு இடத்தில் மட்டுமே வைஃபை வசதி, இருப்பினும், இங்கு இரண்டு நாட்கள் தங்குவதற்கு மக்கள் பெருந்தொகையைக் கட்டணமாகச் செலுத்துகின்றனர் என்று கூறப்படுகிறது.

அய்யோ போச்சே: ஒரே ஒரு குட்டிக்கரணம் தான்; கால் அவுட்… மேட் இன் சீனா பஞ்சாயத்து

கனடாவின் லேப்ரடார் கடற்கரைக்கு அருகில் அமைந்துள்ள ‘பேட்டில் ஹார்பர்’ (Battle Harbour) என்ற சிறிய தீவு, நவீன உலகத் தொடர்புகளிலிருந்து முற்றிலும் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதையே தனது மிகப்பெரிய ஈர்ப்பாக மாற்றியுள்ளது. ஒரு காலத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் வாழ்ந்த பரபரப்பான மீன்பிடி மையமாக இருந்த இத்தீவு, தற்போது வாகனங்கள் இல்லாத, மக்கள் தங்கள் மொபைல்களை அணைத்துவிட்டு வரலாற்றுச் சிறப்புமிக்க சூழலை அனுபவிக்கும் அமைதியான ஓய்வுதளமாக மாறியுள்ளது.

வரலாறும் பின்னணியும்

அரை மைல் மட்டுமே நீளமுள்ள இத்தீவு, 1770-களில் ஆங்கிலேய வர்த்தகர் ஜான் ஸ்லேட் என்பவரால் மீன்பிடி வர்த்தக மையமாக மாற்றப்பட்டது. இங்கிருந்து உப்பு தடவப்பட்ட ‘காட்’ மீன்கள் ஐரோப்பாவிற்கும் கரீபியன் நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டன. அதன் உச்சக்கட்ட காலத்தில், இங்கு மருத்துவமனை, பள்ளி, தேவாலயம் மற்றும் வயர்லெஸ் நிலையம் இயங்கி வந்தன. சுமார் 300 பேர் நிரந்தரமாகவும், ஆயிரக்கணக்கான பருவகால மீனவர்களும் இங்கு தங்கியிருந்தனர்.

ஆனால், 1930-ல் ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்து, மீன் வளம் குறைந்தது மற்றும் 1960-களில் அரசு கொண்டு வந்த மறுகுடியமர்வுத் திட்டம் ஆகியவற்றால் இத்தீவு மெல்ல மெல்ல காலியானது. 1970-களில் இங்கு நிரந்தரமாக வாழ்ந்த கடைசி மக்களும் வெளியேறினர். ஜூலை 2, 1992 அன்று கனடா அரசு காட் மீன்பிடித்தலுக்குத் தடை விதித்தபோது, இத்துறை சார்ந்த 30,000 பேர் ஒரே நாளில் வேலையிழந்தனர்.

மொபைல் சிக்னல் இல்லாத வரலாற்றுத் தீவு

தற்போது இத்தீவில் புதுப்பிக்கப்பட்ட மர வீடுகள் மற்றும் பழைய மீன்பிடித் தளங்கள் உள்ளன. அரை நூற்றாண்டிற்கும் மேலாக இங்கு நிரந்தர மக்கள் தொகை என்று எதுவும் இல்லை. வருபவர்கள் வரலாற்றுச் சிறப்புமிக்க மரக் குடிசைகளிலும், பழமையான வணிக கட்டிட அறைகளிலும் தங்கலாம். இங்கு டிவிகள் எதுவும் கிடையாது; கடல் அலைகளின் ஓசையும் விலங்குகளின் சத்தமுமே தீவின் அமைதியைக் கலைக்கும். ஆர்க்டிக் நரிகள் வாழும் இத்தீவில் பழைய பாதைகளில் நடைபயணம் மேற்கொண்டு அதன் மீன்பிடி வரலாற்றை நேரில் காணலாம்.

தீவை அடைவது எப்படி?

இங்கு செல்வது ஒரு தனித்துவமான அனுபவம். பயணிகள் முதலில் ‘ஹேப்பி வேலி-கூஸ் பே’  பகுதிக்கு விமானத்தில் சென்று, அங்கிருந்து 5 மணி நேரம் காரில் பயணித்து ‘மேரிஸ் ஹார்பருக்கு’ (Mary’s Harbour) செல்ல வேண்டும். அங்கிருந்து பயணிகள் படகு மூலம் 60 முதல் 75 நிமிடங்கள் பயணித்தால் இத்தீவை அடையலாம். இந்த படகுப் பயணத்தின் போது கடற்பறவைகள், பனிப்பாறைகள் மற்றும் திமிங்கலங்களைக் கூடக் காண முடியும்.

கட்டண விவரங்கள்

இரண்டு பேர் இரண்டு நாட்கள் தங்குவதற்கான ஆரம்பக் கட்டணம் 1,570 கனடிய டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.1.06 லட்சம்) ஆகும். இதில் தங்கும் இடம், படகுப் போக்குவரத்து, உணவு மற்றும் வரலாற்றுச் சுற்றுப்பயணம் ஆகியவை அடங்கும். இத்தீவு ஜூன் மாதம் முதல் செப்டம்பர் தொடக்கம் வரை மட்டுமே திறக்கப்பட்டிருக்கும்.

Source link