டோக்கியோ: செவ்வாய் கிரகத்துக்கு, ‘போபோஸ், டீமோஸ்’ என, இரண்டு சிறிய துணைக்கோள்கள் உள்ளன. ஒழுங்கற்ற வடிவத்தில், உருளைக்கிழங்கு போன்ற தோற்றத்தில் இருக்கும் இவற்றின் தோற்றம் குறித்து விஞ்ஞானிகளிடம் இன்னும் தெளிவான முடிவு இல்லை. இவை, செவ்வாய் கிரகத்தின் மீது பெரிய விண்பொருள் மோதிய போது சிதறிய பொருட்களிலிருந்து உருவாகியிருக்கலாம் அல்லது வேறு பகுதியில் இருந்து வந்த விண்கற்களாக இருக்கலாம் என, இரு வேறு கருத்துகள் உள்ளன.
போபோஸ் நிலவின் விட்டம், 20 – 30 கி.மீ., வரை உள்ளது. இது, செவ்வாய் கிரகத்திலிருந்து, 6,000 கி.மீ., தொலைவில் சுற்றி வருகிறது. பூமியின் நிலவை போல அல்லாமல், இது செவ்வாய் கிரகத்தை ஒரு நாளில் மூன்று முறை சுற்றி வருகிறது.
உலகிலேயே முதன்முறையாக, போபோஸ் துணைக்கோளை ஜப்பான் ஆய்வு செய்ய உள்ளது. இதற்காக, ஜப்பானின் புதிய, ‘எச்- 3’ ராக்கெட் மூலம் நாளை மறுநாள் அக்டோபர் 20ல் விண்கலம் ஏவப்பட உள்ளது.
செவ்வாய் கிரகத்தை சென்றடைய ஓராண்டு ஆகும். அதன்பின், போபோஸ் நிலவை சுற்றி மூன்று ஆண்டுகள் ஆய்வு செய்து, மண் மாதிரிகளை சேகரிக்கும். பின், பூமிக்கு திரும்பும் விண்கலம், 2031ல் மாதிரிகளை ஒப்படைக்கும் என்ற வகையில் திட்டமிடப்பட்டு உள்ளது.
விண்கலத்தின் ஒரு பகுதி மட்டுமே மண் மாதிரிகளை பாதுகாப்பாக எடுத்து பூமிக்கு திரும்பும். இந்த ஆய்வில், அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான, ‘நாசா’ உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளும் பங்கேற்கின்றன. பிரான்ஸ், ஜெர்மனி இணைந்து உருவாக்கிய சிறிய ஆய்வு வாகனமும் விண்கலத்தில் இடம்பெறுகிறது.
