சென்னை: முதல்வர் விஜய் மற்றும் அமைச்சர் நிர்மல்குமாரின் தாயார் குறித்து அவதூறாக பேசியதாக எழுந்த புகாரின் பேரில், திமுக எம்.பி. ஆ.ராசா, முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோரிடம் சைதாப்பேட்டை போலீஸார் 3 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ‘மிசா’ சட்டத்தில் கைது செய்யப்பட்டது தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் அமைச்சர்கள் தவறான தகவல்களை தெரிவித்ததாக கூறி, அதனை கண்டித்து கடந்த செப்டம்பர் 12-ம் தேதி திமுக சார்பில் மாநிலம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திமுக எம்.பி. ஆ.ராசா, முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் பேசினர். அப்போது ஆ.ராசா எம்.பி. முதல்வர் விஜய் குறித்து அவதூறான கருத்துகளை தெரிவித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
மேலும், அமைச்சர் நிர்மல்குமாரின் தாயார் குறித்தும் அவர் அவதூறாக பேசியதாக புகார் கூறப்பட்டது. இதுதொடர்பாக சைதாப்பேட்டை போலீஸார், ஆ.ராசா எம்.பி. மற்றும் மா.சுப்பிரமணியன் ஆகியோர் மீது அவதூறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கின் விசாரணைக்காக ஆஜராகும்படி இருவருக்கும் போலீஸார் சம்மன் அனுப்பினர். அதன்படி, இருவரும் நேற்று காலை 11 மணியளவில் சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் ஆஜராகினர்.
அவர்களிடம் போலீஸார் 3 மணி நேரம் விசாரணை நடத்தினர். விசாரணை முடிந்து பிற்பகல் 2 மணியளவில் இருவரும் காவல் நிலையத்தில் இருந்து வெளியே வந்தனர். அப்போது ஆ.ராசா நிருபர்களிடம் கூறுகையில், ‘இந்த வழக்கில் அலைக்கழிக்கும் நோக்கில் போலீஸார் செயல்பட்டனர்’ என்றார்.
