இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் தற்போது பதவியில் இருக்கும் அதிகாரிகள், அமெரிக்கா, போர்ச்சுகல், கனடா, பிரிட்டன் போன்ற நாடுகளில் நிரந்தரமாக குடியேற திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிப் குற்றம்சாட்டினார்.
சொந்த நாட்டின் மீது பாகிஸ்தான் அதிகாரிகள் நம்பிக்கை இழந்து விட்டதாக இந்தியா முன்னாள் உளவுத்துறை அதிகாரியும், பாகிஸ்தான் நிபுணருமான திலக் தேவாஷர் கருத்து தெரிவித்துள்ளார்.
எக்ஸ் தளத்தில் அவர் கூறியதாவது; பாகிஸ்தானில் ஏதோ தவறு நடக்கிறது. நாட்டின் எதிர்காலம் மீது மூத்த அதிகாரிகள் நம்பிக்கை இழந்து விட்டனாரா? மூழ்கும் கப்பலை விட்டு விட்டு, எலிகள் தப்பியோடுவதைப் போல உள்ளது. குறிப்பிட்ட எண்ணிக்கையில், தற்போது பணியில் இருக்கும் அதிகாரிகள், வெளிநாடுகளுக்கு குடியேற திட்டமிட்டுள்ளனர். குறிப்பாக, அவர்களுக்கு போர்ச்சுகல் மிகவும் விரும்பிய நாடாக மாறிவிட்டது. இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தங்கள் நாட்டு அதிகாரிகள் போர்ச்சுகலில் சொத்து வாங்கியது தொடர்பாக பாகிஸ்தான் அரசு விசாரணை நடத்தி வருகிறது. இது குறித்து தகவல்களைப் பெற அரசுத்துறைகள், அமைப்புகளுக்கு பாகிஸ்தான் பொதுக்கணக்கு குழு சம்மன் அனுப்ப முடிவு செய்துள்ளது.
