கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராகப் பணியாற்றிய அன்பில் மகேஷ் பொய்யாமொழி மீது, பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக் கூறி ரூபாய் 100 கோடி லஞ்சம் பெற்றதாகக் குற்றம்சாட்டப்பட்டது. இக்குற்றச்சாட்டின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினரால் நேற்று அவர் கைது செய்யப்பட்டு, சுமார் 3 மணி நேரம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து, சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு வரும் நவம்பர் 6-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதித்து உத்தரவிட்டது. நீதிபதியின் இந்த உத்தரவைத் தொடர்ந்து, அவர் இரவோடு இரவாகச் சென்னை புழல் சிறையிலுள்ள முதல் வகுப்பு சிறைப் பிரிவில் அடைக்கப்பட்டார்.
இதனிடையே, சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் அன்பில் மகேஷ் தரப்பில் ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், “நான் லஞ்சம் வாங்கியதாக எந்த ஆதாரமும் இல்லை, லஞ்சம் வாங்கியதற்கான ஆதாரங்களைச் சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் காவல்துறையினர் தாக்கல் செய்யவில்லை. ஆதாரங்கள் இன்றியே நான் கைது செய்யப்பட்டுள்ளேன். காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்தபோது நேரில் ஆஜராகி முழு ஒத்துழைப்பையும் வழங்கி உள்ளேன். மேலும், நான் கணைய அழற்சி நோயால் பாதிக்கப்பட்டுள்ளதால் எனக்குத் தொடர் மருத்துவக் கண்காணிப்பு அவசியமாகிறது. எனவே, எனக்கு ஜாமீன் வழங்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த ஜாமீன் மனு இன்று சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, அன்பில் மகேஷின் ஜாமீன் மனுவுக்குப் பதிலளிக்கத் தங்களுக்குக் கால அவகாசம் வேண்டும் என்று மத்திய குற்றப்பிரிவு காவல் துறை சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. காவல் துறை தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, இந்த ஜாமீன் மனு மீதான விசாரணையை வரும் நவம்பர் 2-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
அதேபோல, அன்பில் மகேஷைக் காவலில் எடுத்து விசாரிக்கக் கோரி காவல் துறை தாக்கல் செய்த மனுவும், சோதனையின் போது தனது இல்லத்தில் கைப்பற்றப்பட்ட மின்னணு சாதனங்களைத் திரும்பத் தரக் கோரி அன்பில் மகேஷ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட கோரிக்கை மனுவும் நவம்பர் 2-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
