நமது நிருபர்
உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற டில்லி ஐகோர்ட் அனுமதி அளித்துள்ளது.
நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக்கோரி, டில்லி ஜந்தர் மந்தரில், சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து 21 நாட்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட வந்த அவரை, டில்லி போலீசார் டில்லி சப்தர்ஜங் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரது உடல்நிலையை மருத்துவர்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.
இதனிடையே, வாங்சுக் சட்டவிரோதமாக மருத்துவமனையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், தனியார் மருத்துவமனைக்கு மாற்ற வேண்டும் எனக் கூறி, அவரது மனைவி கீதாஞ்சலி, டில்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த டில்லி ஐகோர்ட் அரசு, போலீசார் மற்றும் மருத்துவமனை நிர்வாகமும், 3 நாட்களுக்குள் அறிக்கை சமர்பிக்க உத்தரவிட்டு இருந்தது.
இந்த வழக்கு இன்று (ஜூலை 21) மீண்டும் டில்லி ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற டில்லி ஐகோர்ட் அனுமதி அளித்துள்ளது. மேலும் அவருக்கு தேவையான தொடர் சிகிச்சைகளை வழங்க டாக்டர்கள் குழுவை அமைக்கவும் உத்தரவிட்டுள்ளது.
