புதுடில்லி: டில்லியில், கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் நடத்திய போராட்டத்தில், போலீசார் தாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாளை மறுநாள் போராட்டம் நடத்த, ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரிகள் சங்கம் முடிவு செய்துள்ளது.
‘நீட்’ தேர்வு வினாத்தாள் கசிவுக்கு எதிராக, டில்லி ஜந்தர் மந்தர் பகுதியில், ஒரு மாதத்துக்கும் மேல் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம் நடத்தினர். கடந்த 20ல், பார்லி.,யை நோக்கி அக்கட்சியினர் பேரணி செல்ல முயன்றனர்.
அப்போது, போலீஸ்காரர்களுக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே கடும் மோதல் நடந்தது. இதில், 100க்கும் மேற்பட்ட போலீசார் காயமடைந்ததாகவும், போலீஸ் வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரிகளின் அமைப்பான டில்லி போலீஸ் சம்மேளனம், டில்லி போலீஸ் கமிஷனர் அனுராக் குமாருக்கு நேற்று எழுதிய கடிதம்:
கடந்த 20ல், கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் நடத்திய போராட்டத்தில் ஊடுருவிய சமூக விரோதிகள், ஜந்தர் மந்தர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பாதுகாப்பு பணியிலிருந்த போலீசார் மற்றும் துணை ராணுவப் படையினர் மீது கற்களை வீசி தாக்கினர்.
இதில், 100க்கும் மேற்பட்ட போலீசார் காயமடைந்தனர். இதை கண்டித்து, நாளை மறுநாள் காலை 11:00 – மாலை 5:00 மணி வரை போராட்டம் நடத்த அனுமதி அளிக்க வேண்டும். இந்த போராட்டம் அமைதியான முறையில் நடக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
