தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், தமிழ்நாட்டின் முதல்வருமான விஜய் நடித்த கடைசிப் படமான ‘ஜனநாயகன்’ பல்வேறு பிரச்சனைகளை தாண்டி ஒரு வழியாக இன்று (23.07.2026) உலகமெங்கும் வெளியாகியுள்ளது. முதல்வராக முதல் படம், சினிமாவில் கடைசி படம் என்ற சூழ்நிலையில் வெளியாகியுள்ளதால் விஜய்யின் ரசிகர்களும் தவெக தொண்டர்களும் படத்தை திருவிழா போல் கொண்டாடி வருகின்றனர்.
வழக்கம் போல் திரையரங்கில் பேனர், பட்டாசு, டிஜே கச்சேரி என நேற்று இரவு முதலே ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே முதல்வர் விஜய் நேற்று இரவு சென்னை அடையாறு தாகூர் திரைப்பட கல்லூரியில் படம் பார்த்து மகிழ்ந்தார். இந்த நிலையில் இன்று தமிழ்நாட்டில் காலை 9 மணி முதல் தொடங்கியது. டைட்டில் கார்டில் ‘மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய்’ என்று இடம் பெற்றுள்ளது. இது அவரது ரசிகர்களை மகிச்சியடைய செய்துள்ளது.
இதனிடையே முன்னதாக படம் இணையத்தில் கசிந்த போது இயக்குநர் அமீர் படத்தில் இஸ்லாமியர்களைப் பயங்கரவாதிகளாகக் காண்பித்துள்ளதாகக் குற்றம் சுமத்தினார். இதற்கு தற்போது வினோத் அளித்துள்ள பதிலில், “இஸ்லாமியர்களை பயங்கரவாதிகளாக நாங்கள் காண்பிக்கவில்லை, படம் பார்த்துவிட்டு அமீர் சார் கருத்து சொல்ல வேண்டும்” எனத் தனியார் ஊடக நேர்காணலில் தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளிக்கும் விதமாக “நண்பர் எச்.வினோத்துக்கு நிச்சயம் உங்கள் படத்தைப் பார்த்து விட்டு நான் விளக்கம் சொல்கிறேன். ஆனால் என் மாணவர்களும் இளைஞர்களும் போராட்டக் களத்தில் ரத்தம் சிந்திக் கொண்டிருக்கும் வேளையில் எனக்கு திரைப்படம் பார்க்க மனமில்லை” எனத் தனது வாட்ஸ் அப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
