ஜனநாயகன் ரிலீஸ்: திரையரங்கில் குவியத் தொடங்கிய ரசிகர்கள்.. நடனமாடி கொண்டாட்டம்

சென்னை,

தமிழக முதல்-அமைச்சர் விஜய் நடிப்பில், இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம், இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் தமிழ் திரைப்படங்களில் ஒன்றாகும். பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜு, கௌதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ் ராஜ், நரேன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

தணிக்கை தொடர்பான பிரச்சினைகளைத் தாண்டி, ‘ஜனநாயகன்’ திரைப்படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. விஜய்யின் இறுதிப் படம் எனக் கூறப்படுவதால், உலகளவில் 3,500-க்கும் மேற்பட்ட திரைகளில் படம் வெளியாக உள்ளது. இதனால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

தமிழ்நாட்டில் 1,000க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் காலை 9 மணிக்கு வெளியாகிறது. கேரளம், கர்நாடகாவில் காலை 6 மணிக்கும், ஆந்திரா, தெலங்கானாவில் காலை 8 மணிக்கு ரிலீசானது. சென்னை கேசினோ, தேவி, ரோகிணி, சத்யம், காசி, கிருஷ்ணவேணி உள்ளிட்ட முக்கிய திரையரங்குகள் முன்பு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்து வருகின்றனர். அவர்கள் விஜய்யின் பாடலுக்கு நடனமாடியும், கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்தும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். விஜய்யின் இறுதித் திரைப்படம் என்பதால், படம் திரையரங்குகளில் மிகப்பெரிய வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Source link