நிர்ணையம் செய்ததை விட அதிக விலைக்கு டிக்கெட் விற்பனை; முதல்வரின் படத்திற்கே இந்த நிலையா? நடவடிக்கை எடுக்க ரசிகர்கள் கோரிக்கை

தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு நடிகர் விஜய் நடித்துள்ள கடைசி திரைப்படமான ‘ஜன நாயகன்’ இன்று (ஜூலை 23) உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இப்படத்தின் வெளியீட்டை முன்னிட்டு ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், சில திரையரங்குகளில் டிக்கெட்டுகள் அரசால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிக விலைக்கு விற்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், நாமக்கல் பகுதியில் உள்ள ஒரு திரையரங்கின் முன்பு ரசிகர்களுக்கும் நிர்வாகத்தினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடைபெறுவது பதிவாகியுள்ளது. அரசின் உச்சவரம்பான ரூ190-ஐ மீறி ரூ300க்கு டிக்கெட்டுகள் விற்கப்படுவதாக ரசிகர்கள் கேள்வி எழுப்புகின்றனர். இதற்கு பதிலளித்த திரையரங்கு நிர்வாகம், தாங்கள் அதிக விலைக்கு டிக்கெட் விற்கவில்லை என்றும், சில ரசிகர்களே டிக்கெட்டுகளை வாங்கி ரூ1000 வரை கூடுதல் விலைக்கு மறுவிற்பனை செய்வதாகவும் குற்றம்சாட்டியுள்ளது. 

மேலும், டிக்கெட் விலையை விநியோகஸ்தர்களே நிர்ணயித்து சென்றதாகவும் அவர்கள் விளக்கம் அளித்தனர். இதற்கிடையில், முதல் நாள் முதல் காட்சிக்கான (FDFS) டிக்கெட்டை பெற பல திரையரங்குகளுக்கு சென்றதாக கூறிய ஒரு ரசிகர், சில இடங்களில் ரூ500 மற்றும் அதற்கு மேல் கூட டிக்கெட்டுகள் விற்கப்படுவதாக குற்றம்சாட்டினார். இந்த சம்பவம் சமூக வலைதளங்களிலும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ரூ150 மதிப்புள்ள டிக்கெட் ரூ500-க்கு விற்கப்படுகிறது. முதலமைச்சரின் படத்திற்கே இந்த நிலை என்றால், இதை உடனடியாக விசாரித்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று ஒருவர் பதிவிட்டுள்ளார்.

மற்றொருவர், “இந்த முறைகேட்டை முதலமைச்சர் அலுவலகத்தின் வாட்ஸ்அப் எண்ணுக்கு புகாரளிக்க வேண்டும். அவருடைய சொந்த படத்திலேயே இப்படி நடக்கிறது என்றால், மற்ற விஷயங்களில் என்ன நடக்கும் என்பதை நினைத்துப் பாருங்கள்” என்று கருத்து தெரிவித்துள்ளார். மேலும், தஞ்சாவூரில் உள்ள ஒரு திரையரங்கில் முதல் நாள் முதல் காட்சிக்கான டிக்கெட்டுகள் ரூ700 வரை விற்கப்பட்டதாகவும் சில ரசிகர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். “அரசு அலுவலகங்களில் லஞ்சத்தை ஒழித்த ஆட்சியில், ‘ஜன நாயகன்’ படத்தின் டிக்கெட்டை கூட கூடுதல் பணம் கொடுக்காமல் வாங்க முடியாத நிலை உள்ளது” என்றும் சிலர் வேதனை தெரிவித்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், டிக்கெட் விற்பனையில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்க வேண்டும் என்றும் விஜய் ரசிகர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Source link