நாடு முழுவதும் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்கள் மிகப்பெரிய அளவில் வெடித்துள்ளன. தலைநகர் டெல்லியை தொடர்ந்து பிற மாநிலங்களும் இளைஞர்கள், மாணவர்கள் நீட் தேர்வுக்கு எதிராக போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். அந்த வகையில் தமிழ்நாட்டிலும் சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த போராட்டத்தில் ஈடுபடுபவர்களை கைது செய்வதை கண்டித்து அதிமுக ஐடி விங் வெளியிட்டுள்ள பதிவு இணையத்தில் கவனம் ஈர்த்து கொண்டிருக்கிறது.
தலைநகர் டெல்லியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியை சார்ந்தவர்கள், இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் நீட் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட விவகாரங்களுக்கு பொறுப்பேற்று ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து போராடி வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பாக இந்த போராட்டக்காரர்கள் நாடாளுமன்றம் நோக்கி பேரணி சென்ற நிலையில், அவர்கள் மீது காவல்துறை தடியடி நடத்தியது. அதோடு கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் போராட்டக்காரர்களை ஒடுக்குவதற்கு போலீசார் முயற்சி செய்தனர்.
இந்த சம்பவத்தினை தொடர்ந்து டெல்லியில் போராடுபவர்களுக்கு ஆதரவாக பிற பகுதியிலும் போராட்டங்கள் பரவி துவங்கியது. அந்த வகையில் டெல்லியில் SFI மற்றும் DYFI அமைப்பை சார்ந்தவர்கள் போராட துவங்கினார்கள். இதில் மாணவர்கள், இளைஞர்கள் உள்ளிட்ட தன்னார்வலர்களும் ஆர்வத்துடன் பங்கேற்று வருகின்றனர். இதனிடையில் இப்போராட்டத்தில் ஈடுபடுவர்கள் கைது செய்யப்படும் சம்பவங்கள் நடந்து வருகிறது.
அதிலும் SFI மற்றும் DYFI அமைப்பின் நிர்வாகிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போராட்டம் துவங்குவதற்கு முன்பாகவே சென்னையில் கைது செய்யப்பட்ட சம்பவம் கடுமையான விமர்சனங்களை கிளப்பியுள்ளது. இதனையடுத்து நீட் தேர்வுக்கு எதிராக போராடுபவர்களை கைது செய்யக்கூடாது. தமிழக காவல்துறையை முதல்வர் ஜோசப் விஜய் கட்டுப்படுத்த வேண்டும் எனவும் பலரும் வலியுறுத்தி கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் இந்த கைது நடவடிக்கைக்கு எதிராக அதிமுக இணையத்தள பிரிவான ஐடி விங் பகிர்ந்துள்ள பதிவு கவனம் ஈர்த்து கொண்டிருக்கிறது. அதாவது பெண்கள், மாணவர்கள் கைது செய்யப்படும் வீடியோ ஒன்றினை அதிமுக ஐடி விங் பகிர்ந்துள்ளது. அதில் கைது செய்யப்பட்டவர்கள் கொலை பண்றவங்களை விட்டுறீங்க. நியாயமான முறையில் போராடும் பெண்கள், இளைஞர்கள், மாணவர்களை கைது பண்றீங்க. தவெக அரசு இவ்வளவு கேவலமான அரசா என கடுமையாக விமர்சித்துள்ளனர்.
தொடர்ந்து எங்கே போனார். ஜனநாயகன் எங்கே போனார். ஜனநாயகன் படத்துக்கு டிக்கெட் விற்க போனாரா என்று முழக்கங்களை எழுப்புகின்றனர். இந்த வீடியோவை பகிர்ந்து, எங்களுக்கு ஜனநாயகன் வேண்டாம். ஜனநாயகம் வேண்டும். போராடும் மக்களை அவதூறாக பேசி குண்டுகட்டாக கைது செய்வது தான் ஜனநாயகமா? என கடுமையான விமர்சனத்தை அதிமுக ஐடி விங் முன்வைத்துள்ளது.
வீதியில் இறங்கி மக்கள் போராடி வரும் நிலையில், அவர்களுடன் நிற்க வேண்டிய ஜனநாயகன் எங்கே போனார்? பதில் உள்ளதா? எனவும் அடுக்கடுக்கான கேள்விகளை அதிமுக ஐடி விங் எழுப்பியுள்ளது. இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருவதை தொடர்ந்து பலவிதமான கமெண்ட்களும் குவிந்து வருவது குறிப்பிடத்தக்கது.
