நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இளைஞர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் கடந்த ஒரு மாதமாக அமைதி வழியில் போராடி வரும் இளைஞர்கள் மீது கண்ணீர்ப் புகைக் குண்டு வீசுதல், அவர்களைக் கண்மூடித்தனமாகத் தாக்குதல் போன்ற வன்முறை செயல்களில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். அதே நேரத்தில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண்களிடம் அத்துமீறுவது, தகாத முறையில் நடந்து கொள்வது, அவர்களைக் கண்மூடித் தனமாகத் தாக்குவது போன்ற இழிவான செயல்களில் காவல்துறையினர் ஈடுபடுவது போன்ற வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளன.
காவல்துறையின் இத்தகைய அபத்தமான போக்கிற்கு, சமூக ஆர்வலர்கள், கல்வியாளர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே, போராட்டத்தை ஒடுக்க அரசு பல்வேறு முறைகளைக் கையாண்டு வரும் நிலையில், இந்த போராட்டம் தலைநகரில் இருந்து நாடு முழுவதும் பரவி உள்ளது. குறிப்பாக, தமிழ்நாடு, கேரளம், கர்நாடகா, மராட்டியம், பீகார், மேற்குவங்கம் மற்றும் பஞ்சாப் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் மாணவர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டு நிலையில், நீட் தேர்வை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும் என்ற உறுதியான கோரிக்கையை முன் வைத்து வருகின்றனர்.
இந்நிலையில், கேரள மாநிலத்தில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், எஸ்எப்ஐ மாணவர் அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் போராட்டத்தின் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டுமென முழக்கமிட்டனர். தொடர்ந்து, அவர்கள் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்றனர். அப்போது, காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தண்ணீர் பீய்ச்சியடித்துக் கலைக்க முயன்றனர். இதனால், அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது.
