இயற்கைப் பேரிடர்களுக்கும் ஜப்பானுக்கும் இடையிலான போராட்டம் என்பது தசாப்தங்கள் கடந்தும் ஓயாத ஒன்றாகவே நீடித்து வருகிறது. உலகிலேயே நில அதிர்வுகள் அதிகம் ஏற்படும் பசிபிக் மீது அமைந்துள்ள தீவுக்கூட்டம், இன்று மீண்டும் ஒரு சக்திவாய்ந்த இயற்கையின் சீற்றத்தைச் சந்தித்துள்ளது.
ஜப்பானின் தெற்குப் பகுதியான கியூஷு தீவில் அமைந்துள்ள குமாமோட்டோ மாகாணத்தை இன்று ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆகப் பதிவான பயங்கர நிலநடுக்கம் உலுக்கியெடுத்துள்ளது. ஜப்பானிய நேரப்படி மதிய வேளையில், குமாமோட்டோ மாகாணத்தின் கடற்பகுதியில் திடீரென இந்த நில அதிர்வு ஏற்பட்டது. ஜப்பானிய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவலின்படி, இந்த நிலநடுக்கத்தின் மையப்புள்ளி கடல் மட்டத்திலிருந்து வெறும் 10 கிலோமீட்டர் ஆழத்தில் மிகக் குறுகிய தூரத்தில் அமைந்திருந்தது.
ஆழம் குறைவாக இருந்ததன் காரணமாகவே, நில அதிர்வின் வீரியம் கடலோரப் பகுதிகளில் மிகக் கடுமையாக உணரப்பட்டது. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, குமாமோட்டோ மட்டுமின்றி அதன் அண்டை மாகாணங்களான நாகசாகி, ககோஷிமா, ஃபுகுவோகா, சாகா, ஓயிட்டா மற்றும் மியாசாகி ஆகிய பகுதிகளுக்கும் அவசரகால நிலநடுக்க எச்சரிக்கையை அரசு உடனடியாக விடுத்தது. நிலநடுக்கத்தின் தீவிரத்தால் குமாமோட்டோ பகுதியில் பல கட்டிடங்கள் பலத்த சேதமடைந்து இடிந்து விழுந்துள்ளன.
திடீரென கட்டிடங்கள் குலுங்கியதால், மக்கள் அலறியடித்தபடி சாலைகளிலும் திறந்தவெளிகளிலும் தஞ்சம் புகுந்தனர். இந்த விபத்துகளில் பலருக்குக் காயங்கள் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டுப் பிரதமர் சானே தகைச்சி அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார். இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் உள்ளூர் பேரிடர் மீட்புக் குழுவினரால் முடுக்கிவிடப்பட்டுள்ளன. நிலநடுக்கத்தின் மையப்புள்ளி கடலுக்கு அடியில் இருந்ததால், உடனடியாகச் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.
கடலோரப் பகுதிகளில் சுமார் 1 மீட்டர் உயரம் வரை ராட்சத அலைகள் எழக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மக்கள் அனைவரும் உடனடியாகப் பாதுகாப்பான உயரமான இடங்களுக்கு இடம்பெயருமாறு அரசு உத்தரவிட்டது. ஜப்பானிய தேசிய ஒளிபரப்பு நிறுவனமான என்.ஹெச்.கே, சில கடலோரப் பகுதிகளில் ஏற்கனவே இந்த அளவிலான அலைகள் கரையைத் தொடத் தொடங்கியுள்ளதாகத் தகவல் வெளியிட்டுள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்ட சில நிமிடங்களிலேயே ஜப்பானிய பிரதமரின் அலுவலகம் அவசரகாலக் கட்டுப்பாட்டு மையமாக மாற்றப்பட்டது. எல்லாவற்றிற்கும் மேலாக மனித உயிர்களைக் காப்பதே எங்களின் முதல் கடமை என்று அறிவித்த பிரதமர், மீட்புப் பணிகளில் எந்தவித தொய்வும் இருக்கக் கூடாது என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
ஜப்பானைப் பொறுத்தவரை நிலநடுக்கம் ஏற்படும்போதெல்லாம் அணுமின் நிலையங்களின் பாதுகாப்பு பெரும் கவலையாக மாறும். 2011 ஆம் ஆண்டு புகுஷிமா அணுமின் நிலையம் சந்தித்த பேரழிவை மனதில் கொண்டு, உடனடியாக தென்மேற்கு ஜப்பானில் உள்ள அணுமின் நிலையங்கள் ஆய்வு செய்யப்பட்டன. தற்போதைய நிலவரப்படி, எந்தவொரு அணுமின் நிலையத்திலும் எவ்விதப் பாதிப்போ அல்லது அசாதாரண சூழலோ ஏற்படவில்லை என்று அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் உறுதிபடத் தெரிவித்துள்ளது.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/07/28/112-2026-07-28-16-35-38.jpg)
உலகில் ஏற்படும் ஒட்டுமொத்த நிலநடுக்கங்களில் சுமார் 18 சதவீதம் ஜப்பானில்தான் பதிவாகின்றன. கடந்த ஏப்ரல் மாதத்திலும், ஜப்பானின் வடக்கு பகுதியில் 7.7 ரிக்டர் அளவில் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டு, டோக்கியோ வரை அதிர்வுகளை ஏற்படுத்தியிருந்தது. அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் நிலநடுக்கத்தைத் தாங்கும் கட்டிடக் கலை மூலம் ஜப்பான் இதுபோன்ற பேரிடர்களைத் தொடர்ந்து எதிர்கொண்டு வந்தாலும், இயற்கை சீற்றத்திக்கு முன்னால் பல நேரங்களில் சவாலாகவே முடிகின்றன. தற்போதைய குமாமோட்டோ நிலநடுக்கத்தின் முழுமையான சேத விபரங்கள் மற்றும் மீட்புப் பணிகள் குறித்த விபரங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
