'ஜப்பான் ஆடை சந்தையில் இந்திய பங்களிப்பு உயரும்'

திருப்பூர்: ”போட்டித்திறன் அதிகரித்துள்ளதால், ஜப்பானிய சந்தையில் இந்தியாவின் பங்களிப்பை விரிவாக்கலாம்,” என, ஜப்பானுக்கான இந்திய துாதர் நக்மா முகமது மாலிக் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்திய ஏற்றுமதியாளர்கள், சர்வதேச கண்காட்சிகளில் பங்கேற்க, ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (ஏ.இ.பி.சி.,) ஊக்குவிக்கிறது. ஜப்பானில் நேற்று துவங்கியுள்ள, 18வது ‘இந்தியா டிரெண்ட் பேர்’ கண்காட்சியில், ஏ.இ.பி.சி., அமைத்துள்ள, இந்திய ஆயத்த ஆடை கண்காட்சி, ஜப்பானிய வர்த்தகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.

டோக்கியோவில் மூன்று நாள் கண்காட்சியை, ஜப்பானுக்கான இந்திய துாதர் நக்மா முகமது மாலிக் துவக்கி வைத்தார். ஜப்பானுக்கான இந்திய ஆடை ஏற்றுமதி, கடந்த நிதியாண்டில், 2,264 கோடி ரூபாய்க்கு நடந்துள்ளது; இது, முந்தைய ஆண்டை காட்டிலும், 23 சதவீதம் அதிகம். இந்தாண்டில் கூடுதல் வளர்ச்சி என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது என்று அவர் கூறினார்.

ஏ.இ.பி.சி., தலைவர் சுப்பிரமணியன் கூறுகையில், ”ஜப்பான் கண்காட்சியில், திருப்பூர், கரூர், பெங்களூரு, சூரத் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஏற்றுமதியாளர்கள், 156 ஸ்டால்கள் அமைத்துள்ளனர். இந்திய உற்பத்தி திறன், புத்தாக்க ஜவுளி, வளம் குன்றா வளர்ச்சி நிலை உற்பத்தி ஆடைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்திய ஆடைகளுக்கான போட்டித்திறன் அதிகரித்துள்ள நிலையில், ஜப்பானிய சந்தையில் இந்தியாவின் பங்களிப்பை விரிவாக்கலாம் என, ஜப்பானுக்கான இந்திய துாதரும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்” என்றார்.

Source link