ஜப்பான் நிலநடுக்கத்தில் 13 பேர் உயிரிழப்பு – சேதங்களை காட்டும் புகைப்படங்கள்

பட மூலாதாரம், Reuters

பிரசுரிக்கப்பட்டது ஒரு நிமிடத்துக்கு முன்னர்

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

ஜப்பானின் குமாமோட்டோ மாகாணத்தில் 6.8 அளவிலான நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகளில் 13 பேர் உயிரிழந்தனர். மீட்புப் பணிகள் இரவு முழுவதும் நடைபெறும் நிலையில், 2016-ஆம் ஆண்டுப் பேரிடரைப் போல மேலும் அதிர்வுகள் வரக்கூடும் என ஜப்பான் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

உள்ளூர் நேரப்படி ஜூலை 28ஆம் தேதி மாலை 4.27 மணிக்கு கியூஷு தீவின் உள்பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது, இதனால் 1,50,000-க்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டனர். ஒரு குறுகிய கால சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு, ஒரு மணி நேரத்துக்குள் அது திரும்பப் பெறப்பட்டது. ஜப்பானின் வானிலை ஆய்வு மையம் இந்த நிலநடுக்கத்தின் தற்காலிக அளவை 7.1 ஆகப் பதிவு செய்தது. ஆனால், அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் பின்னர் இதனை 6.8 ஆகக் குறிப்பிட்டது.

ஜப்பானிய பிரதமர் சனாயே தகாயிச்சி மீட்புப் பணிகளுக்கு உதவுவதற்காக 3,600 பணியாளர்களைக் களத்தில் இறக்கியுள்ளார். மேலும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஏற்பட்டுள்ள சேதங்களை மதிப்பிடவும் கண்காணிக்கவும் குழுக்கள் “இரவு முழுவதும் சோர்வின்றி உழைக்கும்” என்று கூறியுள்ளார்.

ஜப்பான் நிலநடுக்கம்

பட மூலாதாரம், Reuters

ஹிகாவா நகரில் குறைந்தது 18 வீடுகள் இடிந்து விழுந்ததைத் தொடர்ந்து இருவர் இதயம் செயலிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டனர். ஜப்பானில், பொதுவாக ஒரு நபரிடம் உயிருக்கான அறிகுறிகள் எதுவும் இல்லை, ஆனால் அவர்களின் மரணம் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை என்ற நிலையில், ‘இதயம் செயலிழந்த நிலையில்’ என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது.

இந்த வீடுகளில் இரண்டில் இன்னும் குடியிருப்பாளர்கள் சிக்கியிருப்பதாகக் குமாமோட்டோ அதிகாரிகளை மேற்கோள் காட்டி என்ஹெச்கே அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

தீயணைப்பு வீரர்களும் தற்காப்புப் படைகளும் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருவதாகவும், சேதமடைந்த கட்டடங்களை அகற்றி வருவதாகவும் அந்தசெய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

13 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

வணிக வளாகத்தில் மீட்புப் பணிகள், ஜப்பான் நிலநடுக்கம்

பட மூலாதாரம், Fire and Disaster Management Agency

படக்குறிப்பு, வணிக வளாகத்தில் மீட்புப் பணிகள்

குமாமோட்டோவில் உள்ள ஏயான் மாலில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அங்கு வெடிப்பு ஏற்பட்டதையும் இரண்டாவது மாடி இடிந்து விழுந்ததையும் பார்த்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். இந்த ஏயான் மால் புதுப்பிக்கப்பட்ட வணிக வளாகமாக கடந்த ஜூன் 13-ஆம் தேதி தான் மீண்டும் திறக்கப்பட்டிருந்தது. இது முதன்முதலில் 2005-ஆம் ஆண்டில் திறக்கப்பட்டது, ஆனால் இப்பகுதியில் கிட்டத்தட்ட 300 பேரைக் கொன்ற மிக மோசமான நிலநடுக்கங்களின்போது சேதமடைந்ததால், 2016-ஆம் ஆண்டில் தற்காலிகமாக மூடப்பட்டது.

பரந்து விரிந்துள்ள இந்த வணிக வளாகத்தில் சுமார் 200 கடைகளும், 5,000 வாகன நிறுத்த இடங்களும் உள்ளன. இரண்டு பேர் உயிரிழந்துள்ள இந்த குமாமோட்டோ கிளை வளாகத்தில், பல்வேறு ஃபேஷன் கடைகள், ஒரு திரையரங்கம், ஒரு புத்தகக் கடை மற்றும் உணவு அரங்கம் ஆகியவை உள்ளன.

ஜப்பான் நிலநடுக்கம்

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, ஜப்பானின் தெற்குப் பகுதியான குமாமோட்டோ மாகாணத்தில் 7.1 அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, இடிந்து விழுந்த யாட்சுஷிரோ புனித தலத்தின் வழிபாட்டு மண்டபம்

குமாமோட்டோவுக்கு தெற்கே உள்ள யாட்சுஷிரோ நகரில் அமைந்துள்ள நிப்பான் பேப்பர் இண்டஸ்ட்ரீஸ் ஆலையின் புகைபோக்கி இடிந்து விழுந்ததில், இரண்டு பேர் “இதயம் செயலிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டனர்” என்பதுடன் மேலும் ஒன்பது பேரைக் இன்னும் காணவில்லை.

குமாமோட்டோ நகரம் முழுவதும் பரவலாக பல்லாயிரக்கணக்கான மக்கள் மின்சாரம் மற்றும் தண்ணீர் துண்டிப்பை எதிர்கொண்டனர், குறைந்தது 45 மருத்துவக் கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளன. அதே நேரத்தில் 17-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கோட்டையின் வெளிப்புறச் சுவர்கள் இடிந்து விழுந்துள்ளன.

ஜப்பான் நிலநடுக்கம்

பட மூலாதாரம், Reuters

“என் தொலைக்காட்சிப் பெட்டி என் மீதே விழுந்தது,” என்று நேரில் பார்த்தவர் ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார். மற்றொருவர் “தனக்கு கீழே உள்ள கட்டடம் திரவமாக மாறுவது போன்ற” உணர்வு ஏற்பட்டதாக விவரித்தார். நிலநடுக்கம் ஏற்பட்ட சில மணி நேரங்களிலிருந்தே “தொடர்ச்சியான நில அதிர்வுகள் (Aftershocks)” ஏற்படுவதாக உள்ளூர் மக்களும் தெரிவித்து வருகின்றனர்.

ஜப்பானிய வானிலை ஆய்வு மையத்தின் ஷின்ஜி கியோமோட்டோ, மேலும் நிலநடுக்கங்கள் ஏற்படக்கூடும் என்பதால் பொதுமக்களை “விழிப்புடன் இருக்குமாறு” கேட்டுக்கொண்டுள்ளார். என்ஹெச்கே தொலைக்காட்சி தகவலின்படி, 2016 ஆம் ஆண்டில் இதே குமாமோட்டோ மாகாணத்தை சில நாட்கள் இடைவெளியில் தாக்கி 278 பேரைக் கொன்ற மிக மோசமான தொடர் நிலநடுக்கங்களை அவர் இதற்கு உதாரணமாகக் குறிப்பிட்டார்.

ஜப்பான் நிலநடுக்கம்

பட மூலாதாரம், Reuters

குமாமோட்டோ மாகாணத்தின் காஷிமாவில், பலத்த சேதமடைந்த ஏயான் மால் குமாமோட்டோ கட்டடத்தை நோக்கி மீட்புப் படையினர் நடந்து செல்கின்றனர்.

பட மூலாதாரம், EPA/Shutterstock

படக்குறிப்பு, குமாமோட்டோ மாகாணத்தின் காஷிமாவில், பலத்த சேதமடைந்த ஏயான் மால் குமாமோட்டோ கட்டடத்தை நோக்கி மீட்புப் படையினர் நடந்து செல்கின்றனர்.குமாமோட்டோவில் நிலநடுக்கத்துக்குப் பிறகு, அப்பகுதி மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்ப முயற்சித்து வருகின்றனர்.

பட மூலாதாரம், AFP via Getty Images

படக்குறிப்பு, குமாமோட்டோவில் நிலநடுக்கத்துக்குப் பிறகு, அப்பகுதி மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்ப முயற்சித்து வருகின்றனர்.நில அதிர்வுகளின் போது அலமாரிகளிலிருந்து பொருட்கள் கீழே விழுந்தன.

பட மூலாதாரம், AFP via Getty Images

படக்குறிப்பு, நில அதிர்வுகளின் போது அலமாரிகளிலிருந்து பொருட்கள் கீழே விழுந்தன.ஏயான் மாலுக்கு வெளியே திரண்டிருந்த அவசர சேவையினர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஏயான் மாலுக்கு வெளியே திரண்டிருந்த அவசர சேவையினர்

– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

Source link