“டாஸ்மாக் மதுபானக் கடைகளை தனியார் மயமாக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும்”- டிடிவி தினகரன்

சென்னை: “டாஸ்மாக் மதுபானக் கடைகளை தனியார் மயமாக்கும் முடிவை ஆரம்ப நிலையிலேயே மறுபரிசீலனை செய்து கைவிடுவதோடு, மதுபானக் கடைகளை படிப்படியாக மூடும் நடவடிக்கையை தொடர வேண்டும்,” என தமிழக அரசுக்கு அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், “தமிழகத்தில் நகர்ப்புற பகுதிகளில் இயங்கும் சுமார் 2,500 டாஸ்மாக் மதுபானக் கடைகளை தனியார் வசம் ஒப்படைக்கவும், வரும் சட்டமன்றக் கூட்டத்தொடரிலேயே அதற்கான சட்டத் திருத்தத்தைக் கொண்டுவர தவெக அரசு முடிவு செய்திருப்பதாகவும் நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

பாட்டிலுக்கு பத்து ரூபாய், மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்பனை, அனுமதிக்கப்பட்ட நேரத்தையும் தாண்டி சட்டவிரோத மது விற்பனை என தொடர் புகார்களுக்கு மத்தியில், தற்போது டாஸ்மாக் கடைகளை தனியார் வசம் ஒப்படைக்கும் தவெக அரசின் முடிவு, சட்டவிரோத மதுபானங்களின் விற்பனையை அதிகரிக்குமே தவிர ஒருபோதும் குறைக்காது.

ஆட்சிக்கு வந்தவுடன் வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிலையங்கள், பொதுமக்கள் அதிகளவில் கூடும் பேருந்து நிலையங்களுக்கு அருகில் இருக்கும் 710 மதுபானக் கடைகள் மூடப்பட்டுள்ளதாகச் சொல்லப்பட்ட நிலையில், மீதமிருக்கும் மதுபானக் கடைகளை படிப்படியாக மூட வேண்டிய அரசு, மதுபானக் கடைகளை தனியார் வசம் ஒப்படைக்க முற்படுவது அதன் நிர்வாகத் திறமையின்மையையே வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது.

அதோடு, டாஸ்மாக் மதுபானக் கடைகள் தனியார் மயமாக்கப்பட்டால், சுமார் 20 அண்டுகளுக்கும் மேலாக அக்கடைகளில் பணியாற்றிக் கொண்டிருக்கும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களின் வேலை வாய்ப்பும், அவர்களின் எதிர்காலமும் கேள்விக்குறியாகும் அபாயமும் எழுந்துள்ளது.

எனவே, டாஸ்மாக் மதுபானக் கடைகளை தனியார் மயமாக்கும் முடிவை ஆரம்ப நிலையிலேயே மறுபரிசீலனை செய்து கைவிடுவதோடு, மதுபானக் கடைகளை படிப்படியாக மூடும் நடவடிக்கைகளைத் தொடர வேண்டும் என டாஸ்மாக் நிர்வாகத்தையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.” என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

Source link