ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் மீண்டும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர்.
ஜம்மு காஷ்மீரில் உள்ள பூஞ்ச், ரஜௌரி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி வருகிறது. மழையுடன் நிலச்சரிவும் ஏற்பட்டது.
வெள்ளத்தில் நூற்றுக்கணக்கான வாகனங்கள், வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன. மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 15 பேர் பலியானதாக மீட்பு படையினர் தெரிவித்தனர். அடுத்த 72 மணி நேரத்திற்கு மழை மேலும் நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்தது.
இந் நிலையில், மழை, வெள்ளத்தில் மேலும் 7 பேர் உயிரிழந்துள்ளதாக மீட்புக்குழுவினர் அறிவித்து உள்ளனர். பூஞ்ச் மாவட்டம் லோரன் பகுதியில் நிலச்சரிவின் போது வீடுகள் மண்ணில் புதைந்தன.
தகவலறிந்த மீட்புக்குழுவினர் அங்கு சென்று மீட்புப் பணிகளை மேற்கொண்டனர். அப்போது 7 பேர் மண்ணில் புதையுண்டு கிடப்பதை கண்டறிந்தனர். உயிரிழந்தவர்களில் 4 பேர் பெண்கள்.
தொடர்ந்து அப்பகுதியில் வானிலை நிலவரம் சாதகமாக இல்லாததால் மீட்புப்பணிகள் நிறைவடைய கூடுதல் நேரம் தேவைப்படுகிறது என்று மீட்புக்குழுவினர் கூறி உள்ளனர்.
