மயிலாடுதுறை: சோதனைச்சாவடி வழியாக சென்ற வாகன ஓட்டியிடம் ரூ.50 லஞ்சம் பெற்ற போலீஸ் ஏட்டு ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் குற்ற சம்பவங்கள், சட்டவிரோத கடத்தலை தடுக்க மயிலாடுதுறை, திருவாரூர் மாவட்ட எல்லை பெரம்பூர் போலீஸ் சரகம் கழனிவாசல் என்ற இடத்தில் சோதனை சாவடி அமைத்து 24 மணி நேரமும் போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு இந்த சோதனைச்சாவடி வழியே சென்ற லாரியை நிறுத்தி, அதில் வந்த அகர ஆதனூர் கிராமத்தைச் சேர்ந்த மதன்மோகன் என்பவரிடம் ஜி பே மூலம் ரூ 50 லஞ்சம் பெறப்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து மதன்மோகன் பெரம்பூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் தெரிவித்துள்ளார்.
அதை தொடர்ந்து, அவருக்கு பணம் திருப்பி அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து விசாரணை நடத்திய மாவட்ட எஸ்.பி., சினேகா பிரியா உத்தரவின் பேரில் கழனிவாசல் சோதனை சாவடியில் பணியில் இருந்த ஏட்டு தெய்வசிந்தாமணி ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார்.
அவருடன் பணியில் இருந்த ஊர்க்காவல் படை காவலர் கலியபெருமாள் என்பவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
