ஜூலை 31 முதல் கறிக் கோழி விற்பனை நிறுத்தம்: கோழி வணிகர்கள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வரும் ஜூலை 31-ம் தேதி முதல் கறிக்கோழி (பிராய்லர் கோழி) விற்பனை செய்யப்பட மாட்டாது என்றும், கோழி வணிகர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் தமிழ்நாடு கோழி வணிகர்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

கறிக்கோழி உற்பத்தியாளர்கள் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து இந்த கடையடைப்புப் போராட்டத்தை வணிகர்கள் முன்னெடுத்துள்ளனர். கறிக்கோழிகளை விற்பனைக்கு அனுப்புவதற்கு 12 மணிநேரத்திற்கு முன்பாக, உற்பத்தி நிறுவனங்கள் ‘தீவனக் கட்டுப்பாடு’ முறையைக் கடைப்பிடிப்பதில்லை என்று வணிகர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

கோழிகளை விற்பனைக்கு அனுப்பும்போது கழுத்து வரை அளவுக்கு அதிகமாக தீவனம் கொடுத்து அனுப்புவதாகவும், இதனால் கோழிகளின் கழிவுகள் இறைச்சியில் கலப்பதோடு, எடை மோசடி காரணமாகக் கடுமையான பொருளாதார இழப்பு ஏற்படுவதாகவும் கறிக்கோழி விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். கோழி எடை மோசடிகளைத் தடுத்து நிறுத்தக் கோரியும், உற்பத்தி நிறுவனங்கள் எப்போதும் போல் தீவனக் கட்டுப்பாடு நடைமுறையை உடனடியாகச் செயல்படுத்த வலியுறுத்தியும் வணிகர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

புதுச்சேரியில் உள்ள அனைத்து மொத்த மற்றும் சில்லரை விற்பனையாளர்களும் தமிழ்நாடு கறிக்கோழி விற்பனையாளர்களுடன் இணைந்து இந்த காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். தமிழ்நாடு முழுவதும் சுமார் 60,000 கடைகளில் கறிக்கோழி விற்பனை நிறுத்தப்பட உள்ளதால், 31-ம் தேதி முதல் பொதுமக்களுக்குக் கறிக்கோழி கிடைப்பதில் தற்காலிகமாகப் பெரும் பாதிப்பு ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது.

Source link