-நமது நிருபர்-
ரஷ்யா – உக்ரைன் போர் நீடித்து வரும் நிலையில், போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்கும், குடும்பங்களிலிருந்து பிரிந்த குழந்தைகளை மீண்டும் அவர்களது குடும்பத்தினருடன் சேர்ப்பதற்கும், அமெரிக்க அதிபர் டிரம்பின் மனைவி மெலானியா டிரம்ப் முயற்சி மேற்கொண்டு வருகிறார். ரஷ்யா – உக்ரைன் உடனான தொடர்பு மூலம் ஆறு கட்டங்களாக 34 குழந்தைகள் மீண்டும் அவரவர் குடும்பங்களுடன் இணைய அவர் உதவியதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
தற்போது தெற்கு உக்ரைனில் ஒலேஷ்கி நகரில் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 29 முதல் நகரத்துக்குள் ராணுவ நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தப்படும். மனிதாபிமான உதவிகளை வழங்கவும், பொதுமக்கள் பாதுகாப்பான பாதை வழியாக வெளியேறவும் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மெலானியா டிரம்ப் கூறியதாவது: உக்ரைனின் ஒலேஷ்கி நகரில் போருக்கு முன் 24,000 பேர் வசித்தனர். தற்போது 2,000 பேர் மட்டுமே எஞ்சியுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அவர்களில் பெரும்பாலானோர் முதியவர்கள். சுமார் 50 குழந்தைகளும் அங்கு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு உணவு, குடிநீர், மருத்துவ உதவி தேவைப்படுகின்றன.
கண்ணிவெடிகள் நிறைந்த சாலைகள் மற்றும் தொடர் ராணுவ தாக்குதல்களால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
என் முயற்சியால், மனிதாபிமான உதவிகளை வழங்கவும், பொதுமக்களைப் பாதுகாப்பாக வெளியேற்றவும் அந்நகரத்தில் போரை நிறுத்த ரஷ்யா – உக்ரைன் உடன்பட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
