நமது நிருபர்
டில்லியில் இளைஞர்கள் நடத்தி வரும் போராட்டம் குறித்து மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பரபரப்பு அறிக்கை வெளியிட்டு உள்ளார். அவர் காங்கிரஸ் மற்றும் ராகுலை கடுமையாக சாடி இருக்கிறார்.
‘நீட்’ வினாத்தாள் கசிந்த விவகாரத்தில், பா.ஜ.,வை சேர்ந்த மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி, டில்லி ஜந்தர் மந்தரில், கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதற்கு காங்கிரஸ் எம்பி ராகுல் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த சூழலில் இளைஞர்கள் நடத்தி வரும் போராட்டம் குறித்து மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் வெளியிட்டுள்ள அறிக்கை:
லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் பார்லிமென்டின் மழைக்கால கூட்டத்தொடரின் போது குழப்பத்தை உருவாக்குவதற்காக, மாணவர்களை அரசியல் கருவிகளாக வெட்கமின்றிப் பயன்படுத்துகின்றனர். பிரதமரின் இல்லத்திற்கு வெளியே போராட்டம் நடத்தி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதோடு, பாதுகாப்பு விதிகளையும் காங்கிரஸ் மீறியுள்ளது.
காங்கிரஸ் கட்சி ஜனநாயக ரீதியிலான விவாதத்திற்குப் பதிலாக அரசியல் நாடகத்தை’ தேர்ந்தெடுத்துள்ளது. டில்லியில் நடக்கும் போராட்டம் குறித்து பார்லிமென்டில் விவாதம் நடத்த அரசு தயாராக உள்ளது. மாணவர்களுக்கான தீர்வுகளைக் காண்பது ஒருபோதும் அவர்களின் நோக்கமாக இருந்ததில்லை; அது அரசியல் தலைப்புச் செய்திகளுக்காகக் குழப்பத்தை ஏற்படுத்துவதே ஆகும்.
ராகுலை பொறுத்தவரை, இது மாணவர்களைப் பற்றியது அல்ல. மோதலை உருவாக்குவதே விருப்பமாகும். நீட் குறித்து விவாதிப்பதற்கும், நமது இளைஞர்களின் ஒவ்வொரு கோரிக்கைகளையும் சபையில் நிவர்த்தி செய்வதற்கும் எங்கள் அரசு 100 சதவீதம் உறுதியுடன் உள்ளது.
மாணவர்களின் சந்தேகங்களுக்குத் தெளிவான பதில்களையும், தேர்வு முறையில் உரிய சீர்திருத்தங்களையும் வழங்க மத்திய அரசு முழுமையாக உறுதியளித்துள்ளது. இவ்வாறு தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.
