டில்லியில் போராட்டங்களை தடுக்க தடுப்பு காவல் சட்டம் 3 மாதம் அமல்!அக்.,18 வரை நீட்டித்து உத்தரவு

புதுடில்லி: டில்லியில் கரப்பான்பூச்சி கட்சி நடத்தி வரும் போராட்டம் தீவிரம் அடைந்த நிலையில், தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் போராட்டங்களை தடுக்க, தடுப்பு காவல் சட்ட அதிகாரங்களை டில்லி போலீஸ் கமிஷனருக்கு நீட்டித்து மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. புதுப்பிக்கப்பட்ட இந்த அதிகாரம் கடந்த 19ம் தேதி முதல், அக்., 18 வரையிலான மூன்று மாத காலத்திற்கு அமலில் இருக்கும்.

‘நீட்’ தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி, கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் டில்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

அவர்களுக்கு, மாணவர் அமைப்பினர் உட்பட பல்வேறு தரப்பினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். கடந்த 20ல் போராட்டக்காரர்கள் பார்லிமென்டை முற்றுகையிட முயன்றபோது, போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.

இருதரப்பினருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. தடியடி, கண்ணீர் புகை வீச்சு உள்ளிட்ட சம்பவங்களை தொடர்ந்து ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர்.

இந்த மோதலில், போலீசார், போராட்டக்காரர்கள் உட்பட 180 பேர் காயமடைந்தனர். இருப்பினும், கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் தங்கள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். இதனால், தலைநகர் டில்லியில் தொடர்ந்து பதற்றம் நீடிக்கிறது.

இந்நிலையில், டில்லி போலீஸ் கமிஷனருக்கு, தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தடுப்பு காவல் அதிகாரத்தை நீட்டிக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இது, கடந்த 19ம் தேதி முதல், அக்., 18 வரை நடைமுறையில் இருக்கும் என உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.

தேசிய பாதுகாப்பு சட்டத்தின் பிரிவு 3ன் கீழ் பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவு, நாட்டின் பாதுகாப்பு, பொது ஒழுங்கு அல்லது அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சேவைகளை பராமரிப்பதற்கு எதிராக செயல்படும் நபர்கள் மீது தடுப்பு காவல் உத்தரவுகளை பிறப்பிக்க அனுமதி அளிக்கிறது.

இதன்படி, முறையான குற்றச்சாட்டுகள் ஏதுமின்றி, ஒருவரை குறிப்பிட்ட காலத்திற்கு தடுப்பு காவலில் வைக்க டில்லி போலீஸ் கமிஷனருக்கு அதிகாரம் உண்டு. டில்லியில் மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்து வரும் சூழலில் இந்த உத்தரவு கவனம் பெற்றுள்ளது.

இந்த சூழலில் தடுப்பு காவல் அதிகாரம் தொடர்பாக சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல்கள் தவறானவை என டில்லி போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.

இது குறித்து டில்லி போலீஸ் வெளியிட்ட அறிக்கை: ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் டில்லி போலீஸ் கமிஷனருக்கு வழங்கப்பட்டுள்ள தடுப்பு காவல் அதிகாரங்கள் புதுப்பிக்கப்படும்.

இது வழக்கமான நிர்வாக நடைமுறை. தற்போது நிலவும் போராட்டங்களை முடக்க இந்த அதிகாரம் பிரத்யேகமாக வழங்கப்படவில்லை.

மேலும், இந்த அதிகாரப் புதுப்பித்தல் உத்தரவு ஜூலை 7-ம் தேதியே பிறப்பிக்கப்பட்டு விட்டது. ஜூலை 19 – அக்., 18 வரையிலான காலத்திற்கு இது நடைமுறையில் இருக்கும்.

கரப்பான்பூச்சி கட்சியினரின் போராட்டம் தீவிரமடைவதற்கு முன்பே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால், இதற்கும் தற்போதைய போராட்டங்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. எனவே, பொதுமக்கள் அதிகாரப்பூர்வமான தகவல்களை மட்டுமே நம்ப வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


ராஜினாமா செய்கிறாரா மத்திய கல்வி அமைச்சர்?

‘நீட்’ வினாத்தாள் கசிவு விவகாரத்தில், கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம் நாடு முழுதும் வேகமாக பரவி வருகிறது. போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினருடன் பேச்சு நடத்த மத்திய அரசும் முன் வந்துள்ளது.

எனினும், பா.ஜ.,வை சேர்ந்த மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவியை ராஜினாமா செய்யும் வரை போராட்டத்தை நிறுத்தப் போவதில்லை என அவர்கள் அறிவித்துள்ளனர். இதன் காரணமாக, தர்மேந்திர பிரதான் தன் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யும் அளவுக்கு நெருக்கடி முற்றி வருகிறது.


நடவடிக்கை எடுக்க வேண்டும்

இளைஞர்களின் எதிர்காலத்தை சீரழித்தது பிரதமர் தான். நம் நாட்டின் கல்வி முறையை முழுதாக கைப்பற்றி, அதை சீரழிப்பதற்கு ஊக்கமும், அனுமதியும் கொடுத்தது அவர் தான். அதற்கு காரணமானவர்களையும் நீங்களே தற்போது பாதுகாத்து வருகிறீர்கள். மாணவர்களின் கோரிக்கைகள் தெளிவாக இருக்கிறது. தர்மேந்திர பிரதானை நீக்க வேண்டும். பகிரங்கமாக மன்னிப்பு கோர வேண்டும். போலீஸ் தாக்குதலுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
– ராகுல், லோக்சபா எதிர்க்கட்சி தலைவர், காங்.,


‘விரைவு நீதிமன்றம் அமைக்கப்படும்’ பிரதமர் மோடி திட்டவட்டம்

‘நீட்’ வினாத்தாள் கசிவு விவகாரத்தில் தொடர்புடைய நபர்களை தண்டிக்க விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார். இது குறித்து தன் சமூக வலைதள பக்கத்தில் நேற்று அவர் கூறியதாவது: நம் இளைஞர்களின் நலன் மற்றும் எதிர்காலத்தை விட முக்கியமானது வேறு எதுவும் இல்லை. ‘நீட்’ வினாத்தாள் கசிவு விவகாரத்தில் தொடர்புடையவர் களுக்கு, விரைவில் தண்டனை கிடைக்கும் வகையில் விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும். இது தொடர்பாக தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். இளைஞர்களின் எதிர்காலத்துடன் விளையாடுபவர்கள் யாராக இருந்தாலும், தண்டனையில் இருந்து தப்ப முடியாது. இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

‘எதிர்க்கட்சிகள் ஓடப்பார்க்கின்றன!’
லோக்சபாவில் பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு நேற்று கூறியதாவது: ‘நீட்’ வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக விவாதிக்க மத்திய அரசு தயாராகவே இருக்கிறது. எதிர்க்கட்சிகள் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேசலாம்; தேவையெனில் இரு நாட்கள் கூட விவாதிக்கலாம். விவாதம் நடக்கும் தேதி, நேரத்தை கூட எதிர்க்கட்சிகளே முடிவு செய்யலாம். ஆனால், விவாதத்தில் பங்கெடுக்காமல் மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என நிபந்தனை விதிப்பது நியாயமல்ல. விவாதத்தில் பங்கேற்காமல் எதிர்க்கட்சிகள் ஓடப் பார்க்கின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

இன்று நாடு முழுதும் போராட அழைப்பு
‘டில்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில், இன்று நாடு தழுவிய அளவில் அமைதி போராட்டம் நடத்த ஆதரவாளர்கள் முன் வரவேண்டும்’ என, கரப்பான்பூச்சி ஜனதா கட்சி அழைப்பு விடுத்துள்ளது.
இது குறித்து அக்கட்சி நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும், கிராமத்திலும், நகரத்திலும், ஆதரவாளர்கள் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தி, எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளது. நாடு முழுதும் இந்த போராட்டம் பரவி வரும் நிலையில், நிலைமையை கட்டுப்படுத்த, மத்திய அமைச்சர்கள் ஜே.பி.நட்டா, ஜிதேந்திர சிங் இருவரையும் போராட்டக்காரர்களுடன் பேச மத்திய அரசு களமிறக்கிவிட்டுள்ளது.
மாணவர்களுடன் எந்த இடத்திலும், எந்த நேரத்திலும் பேச்சு நடத்த தயார் என அறிவித்துள்ள மத்திய அரசு, ஏற்கனவே நான்கு முறை அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது. இது குறித்து அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறுகையில், ”எங்களுக்கு எந்த கவுரவப் பிரச்னையும் இல்லை. மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டாவின் இல்லத்திலோ அல்லது அலுவலகத்திலோ பேச்சு நடத்தி சுமுக தீர்வு காணலாம்,” என்றார். ஆனால், மத்திய அரசின் இந்த அழைப்பை கரப்பான்பூச்சி ஜனதா கட்சி செய்தி தொடர்பாளர் சவுர்வா தாஸ் நிராகரித்துள்ளார்.
”லட்சக்கணக்கான மாணவர்கள் வீதியில் நின்று போராடும்போது, மூடிய கதவுகளுக்கு பின், ரகசியமாக பேச்சு நடத்த எங்களுக்கு விருப்பம் இல்லை. அரசே நேரில் வந்து எங்களுடன் பேச்சு நடத்த வேண்டும். ஜந்தர் மந்தரில் பேச்சு நடத்தலாம்,” என தெரிவித்துள்ளார். மத்திய அரசின் அழைப்பை கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் தொடர்ந்து நிராகரித்து வருவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கடைகள் மூடல்:
டில்லியில் நடந்து வரும் போராட்டத்தின் எதிரொலியாக வணிக பகுதியான கன்னாட் பிளேஸ் பகுதியில் நேற்று மாலை கடைகள், உணவகங்களை மூடுமாறு டில்லி வர்த்தகர்கள் சங்கம் அவசர உத்தரவு பிறப்பித்தது. இதனால், அப்பகுதியில் கடைகள், வர்த்தக நிறுவனங்கள், உணவங்கள் மூடப்பட்டன.

பதவி விலகும்வரை போராட்டம் ஓயாது
‘மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்யும் வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை’ என கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் அறிவித்துள்ளனர். இது குறித்து அக்கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் அஷுதோஷ் ரன்கா கூறியதாவது: ‘நீட்’ வினாத்தாள் விவகாரத்தில் ஒன்றரை மாத போராட்டத்திற்கு பின் பிரதமர் செவி சாய்த்து இருப்பது வரவேற்கத்தக்கது. எனினும், வினாத் தாள் கசிந்த பின், தண்டனை அளிப்பது முறையாக இருக்காது. காயம் ஏற்பட்ட பின், களிம்பு தடவி சிகிச்சை அளிப்பதை விட, காயம் ஏற்படாமல் தடுக்க வேண்டும். பிரதமரின் அறிவிப்புகள், இந்த முறைகேடுகளுக்கு யார் பொறுப்பு என்பதை உறுதி செய்யவில்லை. மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாக பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Source link