டில்லி ஏர்போர்ட்டில் 3 மணி நேரம் பஞ்சாப் முதல்வருக்கு தடுப்பு காவல்

புதுடில்லி: பிரான்சில் இருந்து டில்லி திரும்பிய ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், விமான நிலையத்திலேயே மூன்று மணி நேரம் தடுப்பு காவலில் வைக்கப்பட்டதாக அக்கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.

பஞ்சாப் முதல்வரான பகவந்த் மான், ஐரோப்பிய நாடான பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடந்த சர்வதேச உணவுப் பொருட்கள் வர்த்தக கண்காட்சியில் பங்கேற்பதற்காக கடந்த 17ம் தேதி சென்றார். இந்நிலையில், நேற்று இரவு டில்லி திரும்பினார். விமான நிலையத்தில், அவரது உடைமைகளை சோதனை செய்வதாக கூறி, பகவந்த் மானை மூன்று மணி நேரத்துக்கும் மேலாக, சுங்கத் துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். பின், அவருக்கு 50,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இதையடுத்தே, விமான நிலையத்தில் இருந்து புறப்பட பகவந்த் மான் அனுமதிக்கப்பட்டார்.

இந்த சம்பவத்துக்கு ஆம் ஆத்மி கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பஞ்சாப் மாநில ஆம் ஆத்மி கட்சியின் செய்தி தொடர்பாளர் பல்டேஜ் பன்னு கூறியதாவது:

பிரான்சில் நடந்த கண்காட்சியில், பஞ்சாப் மாநில தயாரிப்புகளை ஊக்குவிப்பதற்காகவே பகவந்த் மான் சென்றார். டில்லி திரும்பிய அவருக்கு, கடும் நெருக்கடி தரப்பட்டுள்ளது. அவருக்கு 50,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற அவமதிப்பு நாட்டின் எந்த முதல்வருக்கும் நடந்ததில்லை. மேலிடத்தில் இருந்து தரப்பட்ட அழுத்தம் காரணமாகவே இந்த சோதனை நடத்தப்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Source link