புதுடில்லி: டில்லி ஜந்தர் மந்தரில் இரவுப் பணியில் இருந்த போலீஸ் இன்ஸ்பெக்டரை போராட்டக்காரர்கள் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மருத்துவ இளநிலை படிப்புக்கான, ‘நீட்’ உட்பட போட்டித் தேர்வுகளில் நடந்த முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்யவும், தற்கொலை செய்து கொண்ட 13 மாணவ – மாணவியரின் குடும்பத்துக்கு தலா ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்கவும் கோரி, கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் ஜூன் 20ம் தேதி முதல் டில்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கடந்த, 20ம் தேதி பார்லிமென்டின் மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கிய நிலையில், போராட்டக்காரர்கள் பார்லி., நோக்கி பேரணி சென்றனர். அப்போது, மாணவர்கள் மற்றும் போலீஸ் இடையே பெரும் வன்முறை நிகழ்ந்தது. இதில், இரு தரப்பிலும் பலர் காயம் அடைந்தனர். இந்நிலையில், நேற்று இரவு, கன்னாட் பிளேஸ் ஹனுமன் கோவில் அருகே, வாகனத்தை நிறுத்தி விட்டு, ஜந்தர் மந்தருக்கு நடந்து சென்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்த் கிஷோர் சிங் மீது தாக்குதல் நடந்ததாக தகவல் வெளியாகி உள்ளன.
ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள இன்ஸ்பெக்டர் நந்த் கிஷோர் சிங் கூறியதாவது: நேற்று இரவுப் பணிக்கு நியமிக்கப்பட்டு இருந்தேன். கன்னாட் பிளேஸில் என் வாகனத்தை நிறுத்தி விட்டு, ஜந்தர் மந்தருக்கு நடந்து சென்றேன். பார்லி., சந்திப்பு அருகே, ஆயிரக்கணக்கான மாணவர்கள் திரண்டிருந்தனர். போலீஸ் மற்றும் அரசுக்கு எதிராக கோஷமிட்டனர். அந்தக் கூட்டத்தை கடந்து சென்ற போது, நூற்றுக்கணக்கானோர் என்னை சூழ்ந்தனர். தடிகளாலும், கற்களாலும் என்னைத் தாக்கினர். கடுமையாக போராடி அந்தக் கூட்டத்தில் இருந்து தப்பித்து வந்தேன். இவ்வாறு அவர் கூறினார்.
மாணவர்கள் போராட்டத்தில் காயம் அடைந்து, ராம் மனோகர் லோஹியா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் போலீஸ்காரர்களை, டில்லி மாநகர போலீசின் சட்டம் – ஒழுங்கு பிரிவு சிறப்பு கமிஷனர் தேவேஷ் சந்திர ஸ்ரீவஸ்தவா சந்தித்து, உடல் நலம் விசாரித்து, ஆறுதல் கூறினார். அப்போது, நிருபர்களிடம் ஸ்ரீவஸ்தவா கூறியதாவது:நேற்று இரவு நடந்த தாக்குதல் குறித்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. போலீஸ் மீது தாக்குதல் நடத்தியவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
போலீசார் மீது கற்களை எறிந்ததாக சந்தேகிக்கப்படுபவர்களில் பலர், போராட்டத்திற்குள் ஊடுருவிய வெளியாட்கள் என தெரிய வந்துள்ளது. வீடியோ காட்சிகள், கண்காணிப்பு கேமரா பதிவுகள் மற்றும் பிற தொழில்நுட்ப ஆதாரங்களை பயன்படுத்தி சமூக விரோதிகளை கைது செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.
கரப்பான் பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜித் தீபிகே கூறுகையில், “ஒரு மாதத்துக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகிறோம். ஆனால், எந்த வன்முறையிலும் ஈடுபடவில்லை. எங்கள் அமைதிப் போராட்டத்தை சீர்குலைக்க சில கும்பல் திட்டமிட்டு சதி செய்து வருகின்றன. போலீசார் மீது தாக்குதல் நடத்திய வெளியாட்கள், எங்கள் போராட்டத்தை திசை திருப்ப முயற்சி செய்கின்றனர்,” என்றார்.
