டில்லி மாணவர் போராட்டம் பின்னணியில் பாகிஸ்தான்; போலி செய்தி பரப்பிய 400 சமூக ஊடக கணக்குகள் முடக்கம்

புதுடில்லி: ஜந்தர் மந்தர் போராட்டம் குறித்து போலி செய்திகளை பரப்பும் 400க்கும் மேற்பட்ட சமூக ஊடக கணக்குகளை டில்லி போலீசார் அடையாளம் கண்டு உள்ளனர். இவை அனைத்தும் பாகிஸ்தானில் இருந்து இயக்கப்படுவதையும் கண்டறிந்துள்ளனர்.

நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்கு எதிரான டில்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டங்களில் ஈடுபடுவோருக்கு வெளிநாடுகளில் இருந்து உணவு உள்ளிட்ட பல்வேறு வகையான ஆதரவுகள் கிடைத்து வருகின்றன.

அதே நேரத்தில், சமூக ஊடகங்களில் போராட்டம் பற்றி ஏராளமான செய்திகள் நாள்தோறும் பரப்பப்பட்டு வருகின்றன. இந் நிலையில், பாகிஸ்தானில் இருந்து இயக்கப்படும் ஏராளமான சமூக ஊடக கணக்குகள் மூலம் போராட்டம் பற்றி போலியான செய்திகள் பரப்பப்படுகின்றன என்று டில்லி போலீசார் கூறி உள்ளார்.

இதுகுறித்து டில்லி மத்திய காவல்துறை துணை கமிஷனர் ரோஹித் ராஜ்பீர் சிங் நிருபர்களிடம் கூறியதாவது;

பாகிஸ்தானில் இருந்து இயக்கப்படும் சமூக ஊடக கணக்குகளை அடையாளம் காண டில்லி போலீசார் சம்பந்தப்பட்ட முகமைகளுடன் இணைந்து பணியாற்றி வருகின்றனர். இந்த சமூக ஊடக கணக்குகளில் போலியான உள்ளடக்கம் பரப்பப்படுகிறது.

செயற்கை நுண்ணறிவு மூலம் போலியாக உருவாக்கப்பட்ட உள்ளடக்கங்கள், போட்டோக்கள் பரப்பியதாக 400க்கும் மேற்பட்ட சமூக ஊடக கணக்குகளை கண்டறிந்து இருக்கிறோம். அவை முடக்கப்பட்டு உள்ளன. ஒரு தகவலை அல்லது செய்தியை பரப்புவதற்கு முன்பு அது உண்மை தானா என்பதை சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு ரோஹித் ராஜ்பீர் சிங் கூறியுள்ளார்.

Source link