புதுடில்லி: தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமாரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் எனக்கூறி இண்டி கூட்டணி தொடர் போராட்டம் நடத்துகிறது. நவம்பர் 1ம் தேதி டில்லி ராம்லீலா மைதானத்தில் போராட்டம் நடக்க உள்ளது. இதனால் வர்த்தகம் பாதிக்கும் என வர்த்தகர்கள் கவலை தெரிவித்தனர். ஆனால், ராகுலோ, காங்கிரசோ அது பற்றி கண்டுகொள்ளவில்லை.
இந்நிலையில், ராம்லீலா மைதானத்தில் போராட்டம் நடத்த காங்கிரசுக்கு டில்லி போலீசார் தடையில்லா சான்று வழங்கினர். அதேநேரத்தில் பல நிபந்தனைகளை விதித்தனர்.
அவை பின்வருமாறு:
* ராம்லீலா மைதானத்தின் நுழைவு மற்றும் வெளியேறும் வாசல்கள் உட்பட முக்கிய இடங்களில் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும். அந்த கேமராக்கள் பதிவு செய்யும் வசதி மற்றும் கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்கும் திறன் கொண்டிருக்க வேண்டும்.
* போதிய குடிநீர் மற்றும் ஆண்கள், பெண்களுக்கு தனித்தனி கழிப்பறை வசதிகள் ஏற்படுத்த வேண்டும்.
* போதிய அளவு தன்னார்வலர்களை நியமிக்க வேண்டும். அவர்களை எளிதில் அடையாளம் காணும் வகையில் குறிப்பிட்ட ஆடைகள் அல்லது பேட்ஜ்களை அணிய வேண்டும்.
* போராட்டத்தை மாலை 5 மணிக்கு முடிக்க வேண்டும். அதற்கு பிறகு எக்காரணத்தை கொண்டும் நீட்டிக்கக்கூடாது. ஐந்து மணிக்கு அங்கிருந்து கிளம்ப வேண்டும்.
* போராட்டத்திற்கு முன்பும், பின்பும், மைதானத்தில் போராட்டக்காரர்கள் தங்க அனுமதிக்கக்கூடாது.
*வாகனங்களை குறிப்பிட்ட அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே நிறுத்த வேண்டும்.
*போராட்டம் அமைதியாக நடப்பதை உறுதி செய்வதுடன், ரவுடித்தனம் அல்லது அத்துமீறி செயல்படுவதை அனுமதிக்கக்கூடாது.
*ராம்லீலா மைதானத்தை தாண்டி வேறு இடங்களை நோக்கி பேரணி செல்லக்கூடாது என போலீசார் தங்களது நிபந்தனைகளில் தெரிவித்துள்ளனர்.
