புதுடில்லி:
பிரான்ஸில் இருந்து டில்லி திரும்பிய பஞ்சாப் முதல்வர் பக்வந்த் சிங் மான், விமான நிலையத்தில் 3 மணி நேரம் காக்க வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார் என ஆம் ஆத்மி குற்றம்சாட்டி உள்ளது.
இது குறித்து அக்கட்சியின் நிர்வாகிகள் கூறுகையில்,
பாரிசில் நடந்த சர்வதேச உணவுப் பொருட்கள் வர்த்தக கண்காட்சியில் பஞ்சாப் பொருட்களை பக்வந்த் சிங் மான் அறிமுகம் செய்தார். பிறகு நேற்று இரவு டில்லி வந்தார். உடமைகளை சோதனை செய்ய வேண்டும் எனக்கூறி 3 மணி நேரம் காக்க வைத்தனர். ‘ உடைமை வந்து கொண்டு இருக்கிறது. இன்னும் சோதனை நடக்கிறது’ என பல காரணங்களை கூறினர்.
ஒரு வழியாக உடைமைகளை ஒப்படைத்தனர். அவர் காரில் கிளம்பும் போது வந்த விமான நிலைய அதிகாரிகள், ‘ எங்களுக்கு மேலிடத்தில் இருந்து நெருக்கடி கொடுக்கின்றனர்,’ என்றனர். மேலும், பக்வந்த் சிங் மானிடம் 50 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்துவதற்கான ரசீதை கொடுத்தனர். இவ்வாறு நிர்வாகிகள் கூறினர். ஆனால், எதற்காக அபராதம் விதிக்கப்பட்டது என்பது குறித்து விளக்கவில்லை.
இந்த கண்காட்சியில் பங்கேற்க பக்வந்த் சிங் மானுக்கு மத்திய அரசு அனுமதி மறுத்தது. பிறகு அவர், பஞ்சாப் உயர்நீதிமன்றத்தின் வாயிலாக அனுமதி பெற்றார்.
இதுதொடர்பாக அம்மாநிலத்தின் முக்கிய எதிர்க்கட்சியான சிரோன்மணி அகாலிதளம் கட்சி நிர்வாகி ஒருவர் கூறுகையில், பக்வந்த் சிங் மான், அவரது மனைவி குர்ப்ரீத் கவுர், அனுமதிக்கப்பட்ட அளவை தாண்டி பணம் வைத்து இருந்தனரா என்ற சந்தேகத்தின் பேரில் தடுக்கப்பட்டனர். விசாரணைக்கு பிறகு கிளம்பி செல்ல அவர்களுக்கு அதிகாரிகள் அனுமதி வழங்கினர். இவ்வாறு அவர் கூறினார்.
