தமிழ்நாட்டில் தற்போதைய சூழ்நிலையில் கிட்டத்தட்ட 4,048 பதிவு செய்யப்பட்ட டாஸ்மாக் விற்பனை நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றின் மூலமாக அரசுக்கு மிகப்பெரிய அளவில் வருமானம் வந்து கொண்டிருக்கிறது. இதற்கிடையில் டாஸ்மாக் துறையில் சில சீர்த்திருத்தங்களை மேற்கொள்வதற்கு புதிய அரசு நடவடிக்கைகள் எடுத்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக தமிழ்நாட்டில் பல இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் புதிதாக ஆட்சி அமைத்து இரண்டு மாதங்கள் கடந்துள்ள நிலையில், புதிய அரசான தவெக கடந்த ஆட்சியில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக நடவடிகைகள் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் டாஸ்மாக் முறைகேடு சம்பந்தமாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தமிழ்நாடு முழுவதும் 41 இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். கோவை (பீளமேடு), பொள்ளாச்சி, ஈரோடு நரசிம்மநாயக்கன் பாளையம் மற்றும் நவகரையில் உள்ள கிடங்குகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதில் திமுக பொருளாளர் எம்பி டி.ஆர். பாலுவுக்கு சொந்தமான இடத்திலும் சோதனை நடத்தப்பட்டு கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. மன்னார்குடியில் உள்ள அவரின் மதுபான ஆலையில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் மேட்டுப்பாளையம் நரசிம்ம நாயக்கன்பாளையத்தில் சிவாஸ் மதுபான தயாரிப்பு ஆலை மற்றும் சிவகங்கை மாவட்டம் தொண்டி சாலையில் உள்ள டாஸ்மாக் கிடங்கிலும் அதிகாரிகள் சோதனை நடத்தி கொண்டிருக்கின்றனர்.
இது தமிழ்நாடு அரசியல் களத்தில் பரபரப்பினை கிளப்பியுள்ளது. இன்று தமிழகத்தில் முக்கிய அரசியல் கட்சி பிரமுகர்கள் இல்லங்கள் மற்றும் அலுவலகங்கள் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் காலை முதலே சோதனை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் திமுக பொருளாளர் எம்பி டி.ஆர். பாலுவுக்கு சொந்தமான மதுபான ஆலை மன்னார்குடி அருகே கர்ணாவூரில் செயல்பட்டு வருகிறது. இந்த மதுபானம் தயாரிக்கு ஆலையில் லஞ்ச ஒழிப்பு காவல்துறை ஆய்வாளர் சித்ரா தலைமையில் பத்துக்கும் மேற்பட்ட போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக இங்கு தயாரிக்கப்படும் மதுபானங்கள் அரசின் டாஸ்மாக் கடைகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில் ஏதேனும் முறைகேடு நடக்கிறதா? அங்கு தயாரிக்கப்படும் மதுபானங்கள் சரியான அளவில் உள்ளது. அதோடு ஆவணங்கள் அனைத்தும் சரியாக உள்ளது என்பது குறித்தெல்லாம் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து இங்கு சோதனை நடைபெற்று கொண்டு வருவது பரபரப்பினை கிளப்பியுள்ளது.
இதற்கிடையில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவருக்கு சொந்தமாக இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. இப்படியான நிலையில் அவரிடம் லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். கரூர், கோவை, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் சோதனை செய்யப்பட்டு கொண்டிருக்கிறது.
இதன் தொடர்ச்சியாக சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தனியார் விடுதியில் அவரிடம் விசாரணை நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் அமைச்சராக இருந்த சமயத்தில் மதுபான கொள்முதல் செய்யப்பட்டது தொடர்பாக செந்தில் பாலாஜியிடம் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.
