டி.எம்.சி அதிருப்தியாளர்களால் சர்ச்சை: மத்திய அரசுக்கு எதிர்ப்பு; அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

எழுதியவர்: ஆசாத் ரஹ்மான்

பெரிதும் அறியப்படாத தேசிய குடிமக்கள் கட்சியுடன் (என்.சி.பி.ஐ) தங்களது இணைப்பை அறிவித்துள்ள டி.எம்.சி கட்சியின் அதிருப்தி குழுவிற்கு அரசு அழைப்பு விடுத்ததை அடுத்து, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.

ஆங்கிலத்தில் படிக்க:

நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் திங்கள்கிழமை தொடங்கவுள்ள நிலையில், அதற்கு முன்னதாக அரசு இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டியிருந்தது.

சமீபகாலமாக இந்தியா (INDIA) கூட்டணியின் கூட்டங்களில் பங்கேற்காமல் இருந்த தி.மு.க மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள், இதர எதிர்க்கட்சிகளுடன் இணைந்து இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்ததாக காங்கிரஸ் எம்.பி-யும், தகவல் தொடர்பு பொறுப்பாளருமான ஜெய்ராம் ரமேஷ் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் தெரிவித்தார்.

“அனைத்து எதிர்க்கட்சிகளும் சில நிமிடங்களுக்கு அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தன. சபாநாயகரின் இறுதி முடிவு இன்னும் நிலுவையில் உள்ள நிலையில், ‘அதிருப்தியாளர்கள்’ என்று சொல்லப்படும் 20 டி.எம்.சி எம்பிக்களின் புகலிடமாக இருக்கும் என்.சி.பி.ஐ கட்சிக்கு அழைப்பு விடுக்க மோடி அரசு எடுத்த முடிவிற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலேயே இந்தத் போராட்டம் நடத்தப்பட்டது,” என்று ரமேஷ் கூறினார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய டி.எம்.சி எம்.பி மஹுவா மொய்த்ரா, “இன்று காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சி, தி.மு.க, ஜே.எம்.எம், ஆம் ஆத்மி கட்சி, நேஷனல் கான்ஃபரன்ஸ், இடதுசாரிக் கட்சிகள், சிவசேனா யு.பி.டி (UBT) உள்ளிட்ட ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்து தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளன. ஏனெனில், அங்கீகரிக்கப்படாத ஒரு கட்சியான என்.சி.பி.ஐ-க்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற மேஜை அலுவலகம் வழங்கிய பட்டியலில் அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸின் பலம் 28 உறுப்பினர்களாகக் காட்டப்பட்டுள்ளது. அதிருப்தியாளர்கள் என்று சொல்லப்படும் இந்த 20 எம்.பி-க்களின் இணைப்புக்கு சபாநாயகர் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை,” என்றார்.

அரசாங்கம் எவ்வளவு தான் கட்சித் தாவல்களைத் தூண்டினாலும் அல்லது பிரிவினைகளை உருவாக்க முயன்றாலும், ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் ஒற்றுமையாகவே இருக்கின்றன என்று சமாஜ்வாடி கட்சி எம்.பி தர்மேந்திர யாதவ் கூறினார்.

இக்கூட்டத்தில் சி.பி.ஐ(எம்) கட்சி சார்பில் பங்கேற்ற மாநிலங்களவை உறுப்பினர் ஜான் பிரிட்டாஸ் கூறுகையில்,  “திரிணாமுல் காங்கிரஸின் பிளவு சபாநாயகரால் ஏற்றுக்கொள்ளப்படாத அல்லது தீர்ப்பளிக்கப்படாத நிலையில், இந்த விவகாரம் சபாநாயகரின் முன் நிலுவையில் இருக்கும்போது, அனைத்துக் கட்சிக் கூட்டத்தின் புனிதத்தன்மை கெடுக்கப்பட்டதால் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன. அரசு மிகவும் தன்னிச்சையாகவும், தடித்தனமாகவும் டி.எம்.சி அதிருப்தி குழுவிற்கு அழைப்பு விடுத்திருப்பது அனைத்துக் கட்சிக் கூட்டத்தின் புனிதத்திற்கும் நம்பகத்தன்மைக்கும் எதிரானது” என்றார்.

கடந்த ஜூன் மாதத்தில், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பிக்கள் குழு ஒன்று, தாங்கள் தேசிய குடிமக்கள் கட்சியுடன் (என்.சி.பி.ஐ) இணைந்துவிட்டதாகவும், அவையில் தங்களுக்குத் தனிப் பிரிவாக அமர இடம் ஒதுக்க வேண்டும் என்றும் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் தெரிவித்திருந்தது. இந்த இணைப்பு குறித்த முடிவு சபாநாயகரின் பரிசீலனையில் நிலுவையில் உள்ளது.

Source link