சொகுசு கார்களை விட பல மடங்கு அதிக விலை கொண்ட ஒரு ‘டீபாட்’ (Teapot) பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? பல நூற்றாண்டுகால பாரம்பரியம், கலைநயம் மற்றும் கைவினைத்திறனின் உச்சமாக உருவாக்கப்பட்ட இந்த டீபாட்டில் ஒருமுறை கூட யாருக்கும் டீ ஊற்றித் தரப்பட்டதில்லை. 2016-ஆம் ஆண்டில், கின்னஸ் உலக சாதனை அமைப்பு “தி ஈகோயிஸ்ட்” (The Egoist) என்ற இந்த டீபாட்டை உலகின் மிக விலையுயர்ந்த டீபாட்டாக அறிவித்தது. இதன் தற்போதைய மதிப்பு சுமார் ரூ.25 கோடிக்கும் அதிகம் ஆகும்.
நைட்டுல வேற லெவல்… ஆனா பகல்ல செம பக்தி; இந்த தேவதையின் நகரத்தில இத மட்டும் பண்ணிறாதீங்க இந்தியர்களே
பிரிட்டிஷ்- இந்திய தொண்டுள்ளம் கொண்ட தொழிலதிபரான நிர்மல் சேத்தியா என்பவரின் ‘என். சேத்தியா ஃபவுண்டேஷன்’ மற்றும் அவரது ‘நியூபி டீஸ்’ (Newby Teas) நிறுவனம் இணைந்து உலகின் மிகச்சிறந்த தேநீர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இதை உருவாக்கியது.
இதை உருவாக்கியது யார்? இதில் என்ன சிறப்பு?
இத்தாலியின் மிலன் நகரத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற நகைக் கலைஞர் ஃபுல்வியோ ஸ்கேவியா என்பவரால் இந்த அரிய பொக்கிஷம் உருவாக்கப்பட்டது. இதன் அடித்தளம் 18 காரட் மஞ்சள் தங்கம் மற்றும் தங்கப் பூசப்பட்ட தூய வெள்ளியால் உருவாக்கப்பட்டது.
இதன் வெளிப்புறத்தில் தாய்லாந்து மற்றும் பர்மாவிலிருந்து கொண்டு வரப்பட்ட 1,658 வைரங்கள் மற்றும் 386 ரத்தினக் கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. இதன் நடுவில் 6.67 காரட் மதிப்புள்ள மிக அரிய தாய்லாந்து மாணிக்கக் கல் பதிக்கப்பட்டு பேரழகை அளிக்கிறது. இதன் கைப்பிடி, வரலாற்றுக்கு முந்தைய காலத்து ‘மேமத்’ (Mammoth) யானையின் புதைபடிவத் தந்தத்தைக் கொண்டு மிக நுணுக்கமாகச் செதுக்கப்பட்டுள்ளது.
மனைவியின் நினைவாக உருவான பிரம்மாண்டக் கலைக்கூடம்
நிர்மல் சேத்தியா தனது மறைந்த மனைவி சித்ராவின் நினைவாக 2011-ஆம் ஆண்டில் ‘சித்ரா கலெக்ஷன்’ என்ற பெயரில் தேநீர் தொடர்பான வரலாற்றுப் பொருட்களின் அருங்காட்சியகத்தை உருவாக்கத் தொடங்கினார். இந்த அருங்காட்சியகத்தில் ஐரோப்பா, ஆசியா மற்றும் அமெரிக்கா கண்டங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட 2,000-க்கும் மேற்பட்ட அரிய தேநீர்ப் பாத்திரங்கள் உள்ளன.
இவை கடந்த 1,000 ஆண்டுகால தேநீர் வரலாற்றைப் பிரதிபலிக்கின்றன. மனித சமூகத்தின் மருத்துவம், கலாச்சாரம், விருந்தோம்பல் மற்றும் அரசியல் வரலாற்றில் தேநீர் எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதை இந்தச் சேகரிப்புகள் விளக்குகின்றன. தற்போது லண்டனில் தனியாருக்குச் சொந்தமான இடத்தில் பத்திரமாகப் பாதுகாக்கப்பட்டு வரும் இந்தத் தொகுப்பை, விரைவில் பொதுமக்கள் பார்வைக்குக் கொண்டு வர பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.
