மழைக்காலம் வந்தாலே டெங்கு காய்ச்சல் பற்றிய அச்சமும் அதிகரிக்கிறது. கொசு கடிப்பதால் பரவும் இந்த நோய், சில நேரங்களில் உயிருக்கு ஆபத்தாகவும் மாறுகிறது. இந்த நிலையில், டெங்குவைத் தடுக்க QDENGA என்ற புதிய தடுப்பூசி உலகம் முழுவதும் கவனம் பெற்றுள்ளது. இந்த தடுப்பூசி என்ன? யாருக்கு செலுத்தலாம்? இது முழுமையான பாதுகாப்பை தருமா?
ஜப்பான் மருந்து நிறுவனம் டெங்கு காய்ச்சலை தடுப்பதற்காக உருவாக்கப்பட்ட ஒரு தடுப்பூசி தான் இந்த QDENGA. இதனை, ஜப்பானை சேர்ந்த TAKEDA மருந்து நிறுவனம் உருவாக்கி உள்ளது. பொதுவாக, டெங்கு வைரஸில் DENV-1, DENV-2, DENV-3, DENV-4 என்று 4 வகைகள் இருக்கு. QDENGA இந்த 4 வகைகளுக்கும் எதிராக உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க உதவி செய்கிறது. இந்த தடுப்பூசி இரண்டு டோஸ்களாக செலுத்தப்படுகிறது. முதல் டோஸ் செலுத்திய பிறகு 3 மாதம் கழித்து, 2ஆவது டோஸ் செலுத்த வேண்டும் என கூறப்படுகிறது.

முக்கிய தகவல்…ஆனால், இதில் ஒரு முக்கிய விஷயம் என்னவென்றால், இந்த தடுப்பூசி செலுத்திக் கொண்டால், டெங்கு வரவே வராது என்று அர்த்தமல்ல. டெங்கு வந்தாலும், கடுமையான பாதிப்பு, மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டிய சூழல், சிக்கல் ஏற்படும் அபாயத்தை குறைக்க உதவி செய்வதே இதன் முக்கிய பணி. அதே நேரத்தில் கொசு ஒழிப்பு, தண்ணீர் தேங்காமல் பாத்துக் கொள்வது என்று சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் அவசியம்.

4 முதல் 60 வயது வரை இந்தியாவில், முக்கியத்துவம் பெற்றுள்ள QDENGA தடுப்பூசியை 4 முதல் 60 வயது வரை உள்ளவர்கள் செலுத்திக் கொள்ளலாம் என்று, அறிவிக்கப்பட்டு உள்ளது. மற்ற டெங்கு தடுப்பூசிகளை மாதிரி இல்லாமல், இதற்கு முன்பு ஒருவருக்கு டெங்கு காய்ச்சல் வந்திருந்தாலும், வராவிட்டாலும் இந்த QDENGA தடுப்பூசியை பாதுகாப்பாக செலுத்தலாம்.

தடுப்பூசி விலை எவ்வளவு?QDENGA VACCINE டெங்குவின் தீவிரத்தை வெகுவாகக் குறைத்து, கடுமையான டெங்குவாக மாறுவதை தடுக்கும் ஒரு தடுப்பூசியாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமாக இருக்கும் நபர்களுக்கும், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் இந்த தடுப்பூசியைப் செலுத்திக் கொள்ளக் கூடாது என்று கூறப்பட்டு உள்ளது. தடுப்பூசியின் செயல் திறன் மற்றும் விநியோகத்தை பொறுத்து, இதனுடைய விலை மாறுபடும். இப்போது வரை 2 டோஸ் தடுப்பூசி தோராயமாக ரூ.6,000 முதல் ரூ.12,000 வரை என பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.

விழிப்புணர்வு அவசியம் QDENGA தடுப்பூசி டெங்குவுக்கு எதிரான முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது. ஆனால், இது மட்டுமே தீர்வு கிடையாது.

தடுப்பூசியோடு சேர்த்து கொசு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளையும் கடைப்பிடித்தால் தான் டெங்குவை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியும். வரும் முன் காப்போம் – டெங்குவை தடுக்க ஒன்றிணைவோம்.

