டெல்லியில் நிகழ்ந்த தடியடி சம்பவம் : அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

டெல்லி ஜந்தர் மந்தரில் நீட் முறைகேடு, வினாத்தாள் கசிவுக்கு எதிராகக் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்தில் பங்கேற்க இளைஞர்களின் கூட்டம் குவிந்த வண்ணம்  உள்ளனர். இந்த போராட்டத்தில் பங்கேற்றவர்கள் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தித் தொடர் முழக்கங்களை எழுப்பி போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கிடையே அமைதி வழியில் போராடிய மாணவர்கள் மீது  காவல்துறையினர் தடியடி நடத்தியுள்ள சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இந்த போராட்டத்தின் போது மாணவர்கள் மீது காவல்துறையினர் நடத்தியதாகக் கூறப்படும் தடியடி சம்பவம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சூர்யகாந்த் அமர்வு முன்பு மனுதாரர்கள் தரப்பில் இன்று (22.07.2026) முறையீடு செய்யப்பட்டது. அப்போது, “மாணவர்கள் மீது டெல்லி காவல்துறையினர் கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்தியுள்ளனர், அதற்கான பல்வேறு வீடியோ ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன. மேலும், இந்த வழக்கை உடனடியாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும்” என வலியுறுத்தினர்.

இதற்குப் பதிலளித்த தலைமை நீதிபதி, வீடியோக்களை பார்ப்பதற்கு தற்போது நேர அவகாசம் இல்லை. நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்க வேண்டாம். மேலும், இந்த வழக்கை இன்றே அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள முடியாது என்றும், தேவையெனில் மறுநாள் பட்டியலிட வாய்ப்பு உள்ளது” எனத் தெரிவித்தார். மற்றொருபுறம் டெல்லி போராட்டம் தொடர்பாக உச்சநீதிமன்றம் மற்றும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தொடர்ந்து தாக்கல் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில், டெல்லி உயர்நீதிமன்றமும் விரைவில் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Source link