டெல்லி கண்காட்சியில் இருந்து தூக்கப்பட்ட போராட்ட புகைப் படங்கள்: மகனுக்காக இறங்கி அடித்த பிரியங்கா காந்தி

எழுதியவர்கள்: அனுஸ்ரீ கேசி, ஆசாத் ரஹ்மான்

வியாழக்கிழமை அன்று காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி வத்ரா, தனது மகன் ரைஹானுக்கு தனது முழு ஆதரவைத் தெரிவித்தார். ரைஹானின் புகைப்படக் கண்காட்சி புதன்கிழமை மாலை பிகானேர் ஹவுஸில்  தொடங்கப்பட இருந்த நிலையில், சில மணி நேரங்களுக்கு முன்பாக அவரது புகைப்படங்கள் அங்கிருந்து அகற்றப்பட்டன.

ஆங்கிலத்தில் படிக்க கிளிக் செய்க

பிகானேர் ஹவுஸ் நிர்வாகம், தங்களது இடத்தின் கொள்கைகளுக்கு மாறாகக் காணப்பட்ட புகைப்படங்கள் அகற்றப்பட்டதாகத் தெரிவித்தது. இதற்கு அதிகாரத்தில் இருக்கும் ஒருவர், மற்றொருவரின் கருத்து வெளிப்பாட்டைக் கண்டு பயப்படும்போது, அவர் தனக்குத் தெரியாமலேயே தான் பாதுகாக்க நினைக்கும் அதிகாரத்தையே இழந்துவிடுகிறார் என்று பிரியங்கா காந்தி, ரைஹானின் ‘நோ ஐடியா ஈஸ் ஃபைனல்’ (No Idea Is Final) என்ற தலைப்பிலான புகைப்படக் கண்காட்சி குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.  

“உண்மையான பக்கத்தில் நீங்கள் நில்லுங்கள்; அழகானவை அனைத்தும் உங்களைத் தேடி வரும். நான் எப்போதும் உன்னை குறித்து பெருமைப்படுகிறேன், எப்போதும் பெருமைப்படுவேன்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

26 வயதான காட்சிப் பதிவுக் கலைஞரும், கியூரேட்டருமான ரைஹானின் புகைப்படக் கண்காட்சி புதன்கிழமை மாலை திறக்கப்பட இருந்தது. ஆனால், குறிப்பிட்ட நேரத்தின் சில மணி நேரத்திற்கு முன்பு, அவரது 105 புகைப்படங்களில் 74 புகைப்படங்களை அகற்றுமாறு அல்லது மாற்றுமாறு அவருக்கு எழுத்துப்பூர்வமாகக் கடிதம் அனுப்பப்பட்டது. அதில் பெரும்பாலான புகைப்படங்கள் தலைநகரில் சமீபத்தில் நடந்த மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் போராட்டங்களை படம்பிடித்தவை ஆகும்.

அந்த தகவல் அவருக்கு பிற்பகல் 3.30 மணிக்கு கிடைத்த நிலையில், புகைப்படங்களை அகற்ற 30 நிமிடங்கள் அவகாசம் அளிக்கப்பட்டதாகத் தெரிகிறது. ரைஹானின் கூற்றுப்படி, அந்த புகைப்படங்களின் “நேரமும் சூழலும்” பொருத்தமற்றது என்றும், அதிக அரசியல் தன்மையுடையது என்றும் அவரிடம் தெரிவிக்கப்பட்டது.

மாலை நேரத்திற்குள், வெறும் 35 புகைப்படங்கள் மட்டுமே கண்காட்சியில் எஞ்சியிருந்தன. அகற்றப்பட்ட படைப்புகளுக்குப் பதிலாக ரைஹானின் குழுவினர் வைத்த வெற்று ப்ரேம்களுக்கும் அந்த அரங்கம் ஆட்சேபனை தெரிவித்தது. “இந்திய தேசியக் கொடியின் படங்களையும் அவர்கள் அகற்ற விரும்பியதைக் கண்டு நான் அதிர்ச்சியடைந்தேன்” என்று ரைஹான் புதன்கிழமை தெரிவித்தார்.

 “நான் அதற்கு ஆட்சேபனை தெரிவித்து, இவற்றை நானாக அகற்ற மாட்டேன் என்று அவர்களிடம் கூறினேன். நான் அந்த வளாகத்தை விட்டு வெளியேறியதும், அவர்களே அந்தப் படத்தை அகற்றிவிட்டனர்” என்று அவர் கூறினார். வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி அறிக்கையில், பிகானேர் ஹவுஸ் மேலாண்மைச் சங்கம், கலை மற்றும் கலாச்சாரத்தை மேம்படுத்துவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு பொதுக் கலாச்சார நிறுவனம் என்று தன்னை விவரித்துக் கொண்டதுடன், அதன் கண்காட்சிகள் அதன் கொள்கைகளுக்குக் கட்டுப்பட வேண்டும் என்றும் கூறியது.

அந்த அறிக்கையில், “ரைஹான் வதேராவின் கண்காட்சியின் ஒரு பகுதியாகக் காட்சிப்படுத்தப்பட்ட சில புகைப்படங்கள் பிகானேர் ஹவுஸ் மேலாண்மைச் சங்கத்தின் கொள்கைக்கு மாறாக இருப்பது கண்டறியப்பட்டது. அதன்படி, அவை அகற்ற கேட்கப்பட்டது. சங்கத்தின் கொள்கைக்கு ஏற்ப உள்ள புகைப்படங்கள் தொடர்ந்து காட்சிப்படுத்தப்பட்டு வருகின்றன” என்று கூறப்பட்டுள்ளது.

அரசியல் உள்ளடக்கம் கொண்ட படங்களுக்கு எதிரான அரங்கின் கொள்கையைக் கருத்தில் கொண்டு, அரசியல் முழக்கங்கள் தாங்கிய படங்களை தான் ஏற்கனவே அகற்றிவிட்டதாக ரைஹான் புதன்கிழமை ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழிடம் தெரிவித்துள்ளார்.

சிவசேனா  தலைவர் ஆதித்யா தாக்கரே, ரைஹானைப் பாராட்டியுள்ளார். “நன்றாகச் செய்தாய் ரைஹான் வதேரா! எந்த விளக்கமும் இல்லாத புகைப்படங்களைக் கூட கண்டு பயப்படும் ஒரு ஆட்சியை எதிர்கொண்டு, தேசியக் கொடிக்காக குரல் கொடுத்து, நமது கொடி இருந்த புகைப்படங்களை அகற்றாமல் நின்ற உனக்கு எனது வாழ்த்துகள்” என்று   எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

“ஜனநாயகம் மீட்டெடுக்கப்படும் போது, தேசியக் கொடியின் படங்களை அகற்றிய இந்த தேசவிரோதச் செயலுக்காக பிகானேர் ஹவுஸ் நிர்வாகம் நியூரம்பெர்க் பாணி விசாரணையை எதிர்கொள்ள வேண்டும்” என்றும் தாக்கரே கூறினார். இந்த சம்பவம் கலை சுதந்திரம் குறித்துக் கடுமையான கேள்விகளை எழுப்புகிறது என்று கூறிய என்.சி.பி எம்.பி சுப்ரியா சுலே உள்ளிட்ட இந்தியா கூட்டணி தோழமைக் கட்சிகளிடமிருந்தும் ரைஹானுக்கு ஆதரவு கிடைத்தது.

காங்கிரஸ் எம்.பி பவன் கேரா கூறுகையில், “அரசாங்கம் சங்கடமான உண்மைகளைக் கண்டு மிகவும் பயந்துவிட்டதால், அதை எதிர்கொள்வதை விட உண்மையைச் தணிக்கை செய்யவே விரும்புகிறது” என்றார்.

அக்டோபர் 25 வரை திறந்திருக்கும் இந்த கண்காட்சியில் எஞ்சியுள்ள படைப்புகள் வனவிலங்குகள், சுருக்கக் கலை மற்றும் போராட்டங்களின் சில புகைப்படங்களை உள்ளடக்கியதாக உள்ளன. இந்தக் கண்காட்சி ‘மூச்சு விடு’ , ‘நகர்’, ‘கேள்’ மற்றும் ‘பேசு’ என நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

‘மூச்சு விடு’ பிரிவில் வனவிலங்குகளின் புகைப்படங்கள் உள்ளன. இதில் ஒரு புலி மரக்கிளையில் அமர்ந்து சிறு கிளைகளுக்கு பின்னால் மறைந்து, கேமராவைப் பார்க்கும் படம் உள்ளது. இது தனது கலைப் பயிற்சியின் மையப் புள்ளியான அமைதியையும் பொறுமையையும் பிரதிபலிக்கிறது என்று ரைஹான் கூறினார்.

கண்காட்சியின் ‘நகர்’ பிரிவின் பெரும்பகுதி போராட்டத்தைச் சேர்ந்ததாக இருந்தபோதிலும், எஞ்சியுள்ள சில படங்கள் இசை நிகழ்ச்சிகளைச் சார்ந்தவையாக உள்ளன. “மக்கள் ஒன்றாக நகர்வதைப் படம்பிடிப்பதில் ஒரு தாளமும் கவிதையும் உள்ளது. அது போராட்டமாக இருந்தாலும் சரி, இசை நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி” என்று ரைஹான் கூறினார்.

போராட்டங்கள் மற்றும் போராட்டத்தில் ஈடுபடுபவர்களைப் படம்பிடிப்பது தான் இதுவரை தனது புகைப்படப் பணிகளில் மிகவும் சுவாரஸ்யமானது என்று ரைஹான் கூறினார். “நான் இதற்கு முன் இதுபோன்ற ஒன்றை செய்ததில்லை. அந்தச் சூழலில் இருப்பது, ஓடுவது மற்றும் கூட்டத்திற்கு இடையில் செல்வது புகைப்படப் பத்திரிகையாளர்கள் தினமும் உணர்வதில் நான் ஒரு சதவீதம் உணர்கிறேன்” என்று அவர் கூறினார்.

‘டெல்லி ஆர்ட் வீக்கெண்ட்’ என்ற பன்முகக் கலாச்சார விழாவின் இணை நிறுவனரான ரைஹான், தனது புகைப்படங்களின் முழுத் தொகுப்பையும் வேறொரு இடத்தில் காண்பிக்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறினார். விரைவில் முழு கலைத் தொகுப்பையும் வேறொரு அரங்கில் காட்சிப்படுத்துவேன் என்று அவர் புதன்கிழமை தனது இன்ஸ்டாகிராம் பதிவில் தெரிவித்துள்ளார்.

Source link