“தட்கல் டிக்கெட் முன்பதிவுக்கு டோக்கன் சிஸ்டம்”

ரயில் நிலைய முன்பதிவு மையங்களில் தட்கல் டிக்கெட் பெற நீண்ட நேரம் வரிசையில் காத்திருப்பதைத் தவிர்க்கவும், ஏஜென்ட்களின் இடைத்தரகு முறையைத் தடுக்கவும் ‘டோக்கன் வழங்கும் புதிய நடைமுறையை’ இந்திய ரயில்வே நிர்வாகம் அறிமுகப்படுத்தியுள்ளது. இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: முதற்கட்டமாக இந்திய ரயில்வேயின் மேற்கு மத்திய ரயில்வே மண்டலத்தில் (West Central Railway – WCR) இப்புதிய டோக்கன் திட்டம் ஆகஸ்ட் 1 முதல் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்படுகிறது. 

ரயில் நிலையங்களில் உள்ள முன்பதிவு மையங்களில் (PRS) நாள்தோறும் தட்கல் டிக்கெட்டுகளைப் பெற விடியற்காலை முதலே பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்துக் கிடக்கும் நிலை இருந்து வருகிறது. இதனை முறைப்படுத்தி, பயணிகள் சிரமமின்றி டிக்கெட் பெற ஏதுவாக இந்த புதிய முறை அமல்படுத்தப்படுகிறது.

புதிய டோக்கன் நடைமுறையின் முக்கிய விதிகள்:

நேர வரம்பு:

ஏசி வகுப்புகள் (AC Classes): காலை 8:30 மணி முதல் 9:00 மணி வரை டோக்கன்கள் விநியோகிக்கப்படும். (முன்பதிவு காலை 10:00 மணிக்குத் தொடங்கும்). ஏசி அல்லாத வகுப்புகள் (Sleeper/2S): காலை 9:00 மணி முதல் 9:30 மணி வரை டோக்கன்கள் வழங்கப்படும். (முன்பதிவு காலை 11:00 மணிக்குத் தொடங்கும்).

எண்ணிக்கை கட்டுப்பாடு: 

நெரிசலைக் கட்டுப்படுத்த ஒரு கவுண்டருக்கு ஏசி வகுப்புகளுக்கு 10 டோக்கன்களும், ஏசி அல்லாத வகுப்புகளுக்கு 15 டோக்கன்களும் மட்டுமே முதற்கட்டமாக வழங்கப்படும். 

முன்னுரிமைப் பிரிவுகள் (Category A & B): 

போலி ஏஜென்டர்கள் டிக்கெட் எடுப்பதைத் தடுக்க டோக்கன்கள் இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு வழங்கப்படுகின்றன. 

பிரிவு A (குடும்ப முன்னுரிமை): 

சொந்தக் குடும்ப உறுப்பினர்களுக்கு டிக்கெட் எடுப்பவர்களுக்கு முதலிடம் வழங்கப்படும். இதற்காகப் பயணிப்பவரின் அடையாளச் சான்று நகலைச் சமர்ப்பிக்க வேண்டும்.

பிரிவு B (பொதுப் பிரிவு): 

ஏனைய தனிநபர்கள் மற்றும் பிறருக்கு இதன்பின் முன்னுரிமை அளிக்கப்படும். இந்த டோக்கன்கள் எவருக்கும் மாற்ற முடியாதவை (Non-transferable). டோக்கன் பெற்றவர்கள் டிக்கெட் எடுத்த பிறகு எஞ்சிய இடங்கள் இருந்தால் மட்டுமே மற்றவர்களுக்கு வாய்ப்பளிக்கப்படும்.

இந்த டோக்கன் நடைமுறை ரயில் நிலையங்களில் உள்ள நேரடி முன்பதிவு மையங்களுக்கு (PRS Counters) மட்டுமே பொருந்தும். ஐஆர்சிடிசி (IRCTC) இணையதளம் மற்றும் செயலி மூலம் ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்யும் நடைமுறையில் எவ்வித மாற்றமும் இல்லை” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

Source link