“தட்டி விடாதீங்க, தட்டிக் கொடுங்க…” – ராயன் தேசிய விருது சர்ச்சைக்கு தனுஷ் பதிலடி!

2024ஆம் ஆண்டுக்கான 72வது தேசிய திரைப்பட விருதுகள் ஜூலை கடந்த 18ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. இதில் தமிழ் சினிமா 10 விருதுகளை அள்ளியது. சிறந்த தமிழ் படம் ‘ராயன்’, சிறந்த தேசிய, சமூக மற்றும் சுற்றுச்சூழல் விழுமியங்களை ஊக்குவிக்கும் படம் கேப்டன் மில்லர், சிறப்பு பிரிவு – தனுஷ்(கேப்டன் மில்லர்), சிறந்த இயக்குநர் – ராஜ்குமார் பெரியசாமி(அமரன்), சிறந்த பின்னணி இசை – ஜிவி பிரகாஷ் குமார்(அமரன்), சிறந்த படத்தொகுப்பு – கலைவாணன்(அமரன்), சிறந்த சண்டைப் பயிற்சி – அனல் அரசு(மகாராஜா), சிறந்த துணை நடிகை – சச்சனா நமிதாஸ்(மகாராஜா), சிறப்புப் பிரிவு – சுரேண் ஜி(ஒலிக்கலவை – மெய்யழகன்) மற்றும் சிறந்த ஒலி வடிவமைப்பு – டி.எஸ். ஹரிஹர சுதன்(ப்ளூ – குறும்படம்) ஆகிய படங்கள் வென்றது.

இந்த விருதில் ராயன் படத்துக்கு அறிவிக்கப்பட்டது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அப்படத்தை விட 2024ஆம் ஆண்டில் சிறந்த படங்கள் இருக்கும் போது அது எப்படி தேர்வு செய்யப்பட்டது என்ற விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் வைத்து வந்தனர். மேலும் தனுஷ் இன்ஃப்ளூவன்ஸ் செய்து விருது வாங்கிவிட்டாரா எனவும் கேட்டனர்.

இந்த நிலையில், ராயன் படத்துக்கு தேசிய விருது குறித்த விமர்சனங்களுக்கு நடிகர் தனுஷ் பதிலளித்துள்ளார். தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு பெரியாளையம் அருகே மஞ்சங்கரணை பகுதியில் அவரது ரசிகர் மன்றம் சார்பில் ரத்த தானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று (26-07-26) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தனுஷ் கலந்து கொண்டு, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதனை தொடர்ந்து அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், “சமீபத்தில் ராயன் படத்துக்கு தேசிய விருது கிடைத்திருக்கிறது. அந்த வருடம், அந்த படத்தை விட தகுதியான பல படங்கள் நிச்சயமாக இருக்கிறது. அந்த படங்களுடைய ரசிகர்கள் அதற்கான அதிருப்தியை வெளிப்படுத்தினார்கள். அதை நான் முழுவதுமாக மதிக்கிறேன்.

‘அது ஒரு கனா காலம்’ படம் ரிலீஸ் ஆனது, அப்போது ரொம்ப சின்ன பையன். அந்த படத்துக்கு எனக்கு தேசிய விருது கிடைக்கும் என்று சொன்னார்கள். நானும் ரொம்ப ஆசையாக காத்திருந்தேன். ஆனால் எனக்கு கிடைக்கவில்லை. அதன் பிறகு புதுப்பேட்டை, 3, மயக்கம் என்ன, மரியான், ராஞ்சனா, வடசென்னை போன்ற படங்களுக்கு தேசிய விருது கிடைக்கும் என சொன்னார்கள். ஆனால் கிடைக்கவில்லை. ஒரு சில விஷயங்கள் நாம் எவ்வளவு தான் முயற்சித்தாலும் அமைத்துக்கொள்ளவே முடியாது. அது தானாக அமையும். இந்த முறை எனக்கு அமைந்துள்ளது. ஒரு தமிழனாக எனக்கு மேலும் 2 தேசிய விருது கிடைத்திருக்கிறது. தட்டு விடாதீங்க, தட்டி கொடுங்க…” என்று கூறினார். 

Source link