சென்னை: தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனங்களின் சோதனைகளை, இஸ்ரோ வளாகங்களில் நடத்த, மத்திய விண்வெளித் துறை அமைச்சகம், அனுமதி வழங்கி உள்ளது.
இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ, கடந்த மூன்று ஆண்டுகளில், 11 தேசிய செயற்கைக் கோள்கள் மற்றும் 9 வாடிக்கையாளர்களுக்கான செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தியுள்ளது.
முக்கியமாக, நிலவின் தென் துருவத்தில், ‘சந்திரயான் — 3’ விண்கலம் தரை இறங்கியது. நாட்டின் முதல் சூரிய ஆராய்ச்சி விண்கலமான, ‘ஆதித்யா – எல்1’ ஏவப்பட்டது. நாசாவுடன் இணைந்து, ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட்டின் வாயிலாக, ‘நிசார்’ செயற்கைக்கோளை ஏவியது.
தற்போது, தமிழகத்தின் துாத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரன்பட்டினத்தில், எஸ்.எஸ்.எல்.வி., எனும் சிறியவகை ராக்கெட்டுகளை ஏவுவதற்கான தளத்தை அமைத்து வருகிறது. மேலும், ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில், மூன்றாவது ஏவுதளத்துக்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பங்களிக்கும் வகையில், குலசேகரன்பட்டினத்தில், தனியார் நிறுவனங்களுக்காக, தனி ராக்கெட் ஏவுதளத்தை இஸ்ரோ அமைத்து வருகிறது.
அதேபோல், இஸ்ரோவின் மற்ற வளாகங்களில், தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனங்களின் சோதனைகளை நடத்த, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதனால், அடுத்த ஆறு ஆண்டுகளுக்குள் விண்வெளி பொருளாதாரத்தில், இந்தியாவின் பங்கு, 3.96 லட்சம் கோடி ரூபாயாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
