தமிழகத்தில் அதிக மின் கட்டணம் வசூலிப்பதாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை: தமிழகத்தில் அதிக மின் கட்டணம் விதிக்கப்படுவது குறித்து விசாரிக்க குழு அமைக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சென்னை திருவேற்காட்டைச் சேர்ந்த காமேஷ் என்பவர் தாக்கல் செய்த மனுவில், ’தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்ற பின் 100 யூனிட் இலவச மின்சாரத்தை, 200 யூனிட்டாக உயர்த்தி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த உத்தரவு பிறப்பித்த பின், கடந்த ஒன்றரை மாதங்களாக மின் கட்டணம், முந்தைய பில்லை விட இரண்டு, மூன்று மடங்கு அதிகமாக வந்துள்ளது.

இது சம்பந்தமாக ஒன்றரை லட்சம் பேர் வரை புகார் அளித்துள்ளனர். இந்தப் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்காத மின்சார வாரியம், தொடர்ந்து அதிக கட்டணங்களை விதித்து வருகிறது.

மூன்று மாதங்களுக்கு முன் 2000 ரூபாய் கட்டணம் விதிக்கப்பட்ட நிலையில், தற்போது 4 ஆயிரம் ரூபாய் முதல் 5 ஆயிரம் ரூபாய் வரை கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மின் கட்டணம் விதிப்பதில் உள்ள இந்த குறைபாடுகளை நிவர்த்தி செய்ய குழு ஒன்றை நியமித்து விசாரிக்க உத்தரவிட வேண்டும். பழைய கட்டண நிர்ணய நடைமுறையை பின்பற்ற உத்தரவிட வேண்டும்’ என மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.டி.ஆஷா, பொது நல வழக்காக உள்ளதாகக் கூறி, மனுவை தலைமை நீதிபதி அமர்வில் பட்டியலிட பதிவுத் துறைக்கு பரிந்துரைத்துள்ளார்.

Source link