தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு; இந்த 3 மாவட்டங்கள் தான் டார்கெட்: பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிமடைந்து வரும் நிலையில், வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது, இதனால் தமிழகம் முழுவதும் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகம் முழுவதும் கடந்த சில தினங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் பெய்து வரும் மழையினால் பல இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ள நிலையில், தண்ணீரை வெளியேற்றும் பணியில் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், மாநகராட்சி ஊழியர்கள் அனைவரும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். பல இடங்களில் வீட்டிற்குள் தண்ணீர் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது, 

அதேபோல் தென் தமிழகத்தில் மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகிறது. இதனிடையே கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர் மழையால் கோதையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், திற்பரப்பு அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க 2-வது நாளாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மதுரையில் பெய்த கனமழையால் வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 

இன்று (அக்டோபர் 23) வங்கக் கடலில், 2 காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மேலும் மழை நீடிக்கும் என்பதால், சில மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கனமழை காரணமாக விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதில் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு பள்ளிகள் மட்டும் இல்லாமல் கல்லூரிகளுக்கும் சேர்த்து விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் நேற்று (அக்டோபர் 22) விடுமுறை அறிவிக்கப்பட்ட செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் இன்று வழக்கம்போல் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்திலும் பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மழை பாதிப்பு குறித்து தமிழ்நாடு வெதர்மேன் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 23.10.2026 நிலவரப்படி சென்னை குடிநீர் ஏரிகளின் நிலவரம் – சீரான உயர்வு காணப்படுகிறது. அடுத்த 3 நாட்களுக்கு, குறிப்பாக ஒரு நாள், மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதால், அடுத்த ஒரு வாரத்தில் நீர்வரத்து கணிசமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம் என்று பதிவிட்டுள்ளார். 

மற்றொரு பதிவில், தமிழ்நாட்டிற்கு மீண்டும் ஒரு மோசமான நாள். சென்னை மழையுடன் கூடிய காலைப்பொழுதில் விழித்து எழுகிறது. பல மணி நேரங்களுக்குப் பிறகு, தென் சென்னையில் இருந்து மேகங்கள் மெதுவாக சென்னைக்குள் நகர்ந்து வருகின்றன. சென்னையின் கடலோரப் பகுதிகளில் மழை தொடங்கி, நகரின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்யும் என்று தெரிவித்துள்ளார். அதேபோல், அடுத்த 4-5 நாட்களில் உருவாகும் என எதிர்பார்க்கப்படும் புயல், தமிழ்நாட்டைப் பாதிக்காமல் ஆந்திரப் பிரதேசத்தை நோக்கி நகரும் என கணிக்கப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Source link