சென்னை: ‘தெற்கு அந்தமான் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று உருவானது. இதன் காரணமாக, தமிழகத்தில் நவ., 1 முதல் மழை தீவிரமடையும்’ என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக, வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் வி.ஆர்.துரை கூறியதாவது: தெற்கு அந்தமான் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல், நேற்று முன்தினம் நிலவிய வளி மண்டல சுழற்சி காரணமாக, நேற்று அதே பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக இன்று வலுவடைய வாய்ப்புள்ளது.
இதன்பின், இந்த அமைப்பு தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நாளை வலுவடையக்கூடும்.
இது புயலாக மாறுமா என்பதை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். வங்கக்கடல் பகுதியில் தற்போது மேற்பரப்பு வெப்பநிலை இயல்பைவிட அதிகமாக உள்ளது. இதனால், வடகிழக்கில் இருந்து தமிழகம் நோக்கி காற்று வீசுவது பாதிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, தற்போது உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடையும்போது, அது ஆந்திரா நோக்கி செல்வதற்கு அதிக வாய்ப்புகள் காணப்படுகின்றன. இதனால், தமிழகத்தில் வட மாவட்டங்களில், நவ., 1 முதல் மழையின் தாக்கம் மீண்டும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும்; அதிகபட்ச வெப்பநிலை, 36 டிகிரி செல்ஷியஸ் வரை பதிவாக வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
