சென்னை: தமிழகத்தில் பெண்கள் நடத்தும், ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
தமிழகம் உட்பட நாடு முழுவதும் உள்ள இளையோரின் புத்தாக்க சிந்தனையை ஊக்குவித்து, ‘ஸ்டார்ட் அப்’ எனப்படும் புத்தொழில் நிறுவனம் தொடங்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு உதவிகளை வழங்குகின்றன. இதனால், சமீப காலமாக பட்டதாரிகள், வேலைக்கு செல்வதற்கு பதில், தாங்களே புதிய தொழில்களை தொடங்கி வருகின்றனர்.
இந்நிறுவனங்களுக்கு, ஸ்டார்ட் அப் அங்கீகாரம் கிடைக்க, மத்திய தொழில் மற்றும் வர்த்தக அமைச்சத்தின் கீழ் இயங்கும் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்தும் துறையில் பதிவு செய்ய வேண்டும்.
தமிழகத்தில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு தேவையான நிதியுதவி, முதலீட்டு வாய்ப்பு, சந்தை வாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு உதவிகளை, தமிழக அரசின் ஸ்டார்ட் அப் டி.என்., நிறுவனம் மேற்கொள்கிறது.
தற்போது, மொத்தம் 15,037 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உள்ளன. இதில் பெண்கள் தலைமையில், 7,572 நிறுவனங்களும், ஆண்கள் தலைமையில், 7,465 நிறுவனங்களும் செயல்படுகின்றன. ஆண்களை விட, பெண்கள், 107 நிறுவனங்களை கூடுதலாக நடத்துகின்றனர்.
‘டாப் 10’ மாவட்டங்கள்
மாவட்டம்- ஸ்டார்ட் அப்கள்
* சென்னை- 5,134
* கோவை- 2,011
* காஞ்சிபுரம்- 1,318
* திருவள்ளூர்- 916
* செங்கல்பட்டு- 815
* மதுரை- 497
* திருச்சி- 446
* சேலம்- 403
* ஈரோடு- 350
* கிருஷ்ணகிரி- 239
