தமிழகத்தில் ரூ.3,000 கோடியில் பேரிடர் மேலாண்மை பணிகள்: அமைச்சர் செங்கோட்டையன்

சென்னை: ”தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டபடி, தமிழகத்தில் பேரிடர் மேலாண்மை தொடர்பான பணிகள், 3,000 கோடி ரூபாயில் மேற்கொள்ளப்படும்,” என, வருவாய் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட்ட பேரிடர் மேலாண்மை நிறுவனம் சார்பில், வெப்ப அபாய மேலாண்மை குறித்த பயிலரங்கு நடந்தது. அதை தொடங்கி வைத்து, அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது:

காலநிலை மாற்றம் போன்ற காரணங்களால், மழை பொழிவு குறைவது, வெப்பத்தின் தாக்கம் அதிகரிப்பது நடக்கிறது. இதன் தாக்கத்தை தணிப்பதற்கான வழிமுறைகளை உருவாக்க வேண்டியது அவசியமாகிறது.

இதற்காக, தமிழக அரசு முதல்முறையாக வெப்ப அலை செயல் திட்டம் உருவாக்கி உள்ளது. இதன் அடிப்படையில், வெப்பத்தின் தாக்கத்தை சமாளிப்பதற்கான திட்டங்கள் பல்வேறு துறைகள் வாயிலாக உருவாக்கப்படும்.

தமிழகத்தில் எந்தெந்த பகுதிகளில் வெப்பம் அதிகரிக்கும் என, அடையாளம் காணப்பட்டுள்ளது. ஊராட்சி நிலையில் உள்ள குக்கிராமங்கள் வரை, இதில் அடையாளம் காணப்பட்டு, தடுப்பு நடவடிக்கைகள் திட்டமிடப்படுகின்றன.

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில், பேரிடர் மேலாண்மை பணிகள், 3,000 கோடி ரூபாயில் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதை கவனத்தில் வைத்து, பேரிடர் மேலாண்மை திட்டங்களை உருவாக்க, முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

ஒவ்வொரு மாவட்டத்துக்கும், பேரிடர் சார்ந்த பணிகளை மேற்கொள்ள, 50 கோடி ரூபாய் வழங்க உத்தரவிடப்பட்டு உள்ளது. இதே போன்று, சென்னையில் சுரங்க பாதைகள் அமைந்துள்ள இடங்களில், மழை நீர் சேகரிப்பு வசதியுடன் ஆழ்துளை கிணறுகள் அமைக்க, 55 கோடி ரூபாய் ஒதுக்கி, அரசு உத்தரவிட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

Source link